கோலாலம்பூர், 27 ஜூன் 2026 : மலேசிய முத்தமிழ்ச் சங்கத்தின் மகளிர் பிரிவு முழுமையாக ஏற்பாடு செய்யும் ‘திவா மியூசிக் பெஸ்ட் 2026’ இசை விழா, வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள விஸ்மா துன் சம்பந்தனில் அமைந்துள்ள கே.ஆர். சோமா அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வை முன்னிட்டு, ஜூன் 25-ஆம் தேதி அதே வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நிகழ்ச்சியின் நோக்கம், ஏற்பாடுகள் மற்றும் இசை விழா தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்தனர்.
மலேசிய முத்தமிழ்ச் சங்கத்தின் மகளிர் பிரிவு முழுமையாக முன்னெடுக்கும் இந்த இசை விழா, பெண்களின் தலைமைத்துவம், கலைத்திறன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புத் திறனை வெளிப்படுத்தும் மேடையாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கும் இந்த இசை விழாவில், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. மலேசிய தமிழ் இசை மற்றும் கலை ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.






