சென்னை, 19 ஜூன் 2026 : கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வர முதலமைச்சர் விஜய் முன்மொழிந்துள்ளார். இந்தத் தீர்மானம், காவிரி நீர் உரிமைகளைப் பாதுகாக்கும் தமிழக அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணைத் திட்டம், காவிரி நீர் பங்கீடு தொடர்பான நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தின் நீர்வரத்து மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தையும் அரசு வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பாக, முதலமைச்சர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்றும், இணை நதிப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி எந்த புதிய திட்டமும் முன்னெடுக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார்.
மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்ட மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும், மாநிலத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், மேகதாது திட்டம் குறித்து தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் நீர்வள விவாதங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.






