கோலாலம்பூர், 17 ஜூன் 2026 : 2025 ஆம் ஆண்டில் மலேசியாவின் மொத்த வர்த்தக மதிப்பு முதல் முறையாக RM3 டிரில்லியனைத் தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகம் (MATRADE) தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உலகளாவிய போட்டித்திறனுக்கும் இது முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
MATRADE வெளியிட்ட தகவலின்படி, 2025 ஆம் ஆண்டில் மலேசியாவின் மொத்த வர்த்தகம் RM3 டிரில்லியனைத் தாண்டியதுடன், சேவைத் துறையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சேவைத் துறை வர்த்தக உபரியை பதிவு செய்துள்ளது.
சேவைத் துறையின் மொத்த வர்த்தக மதிப்பு RM543.01 பில்லியனாக உயர்ந்து, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சுற்றுலா மற்றும் உற்பத்தி சார்ந்த சேவைகளின் வலுவான செயல்பாடுகள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
மேலும், சேவை ஏற்றுமதி வரலாற்றிலேயே அதிகபட்சமான RM272.08 பில்லியனை எட்டியுள்ள நிலையில், இறக்குமதி RM270.93 பில்லியனாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் RM1.15 பில்லியன் வர்த்தக உபரி உருவாகியுள்ளதாக MATRADE தெரிவித்துள்ளது.
இந்த சாதனை, உயர்மதிப்புடைய அறிவுசார் மற்றும் சேவை சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி மலேசியா வெற்றிகரமாக நகர்ந்து வருவதை பிரதிபலிப்பதாக MATRADE தலைவர் டத்தோ ஸ்ரீ ரீசால் மெரிக்கான் நைனா மெரிக்கான் தெரிவித்துள்ளார். புதிய சந்தைகளை நோக்கி ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
உலகளாவிய வர்த்தகச் சங்கிலிகளில் மலேசிய நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உலக சந்தைக்கு கொண்டு செல்வதற்கும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என MATRADE தலைமை நிர்வாக அதிகாரி அபு பக்கார் யூசுப் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டின் இந்த சாதனை, மலேசியாவை ஆசியாவின் முக்கிய வர்த்தக மற்றும் சேவை மையங்களில் ஒன்றாக மேலும் வலுப்படுத்தும் என பொருளாதார வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன.






