என் தமிழ்

சுல்தான் நஸ்ரின் ஷா SOCSO மறுவாழ்வு மையம்: பேராகில் திறந்து வைப்பு

பேராக், 17 ஜூன் 2026 : பேராக் மாநிலத்தின் ஈப்போவில் அமைந்துள்ள சுல்தான் நஸ்ரின் ஷா SOCSO மறுவாழ்வு மையம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பேராக் தாருல் ரிட்சுவானின் சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் அஸ்லான் முஹிப்புதீன் ஷா அல்-மக்ஃபுர்-லாஹ், இந்த மையத்தின் தொடக்கத்திற்கு அரச ஒப்புதல் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பேராக் ராஜா மூடா ராஜா ஜாஃபர் மற்றும் ராஜா தி-ஹிலிர் ராஜா இஸ்கந்தர் துர்கர்னைன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மறுவாழ்வு மையமாகக் கருதப்படும் இந்த மையம், SOCSO மற்றும் ஜப்பானின் சைபர்டைன் நிறுவனத்துக்கிடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த நியூரோ-ரோபோடிக் மற்றும் சைபர்நெட்டிக்ஸ் தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் 65 ஹைப்ரிட் அசிஸ்டிவ் லிம்ப் (HAL) அலகுகள் இடம்பெற்றுள்ளன.

ரோபாட்டிக்ஸ், மெய்நிகர் யதார்த்தம், இயக்க உருவகப்படுத்தல் தொழில்நுட்பம், மேம்பட்ட இயக்கப் பகுப்பாய்வு ஆய்வகம் மற்றும் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புப் பயிற்சி வசதிகள் உள்ளிட்ட பல நவீன அம்சங்கள் இம்மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மேலும், சிகிச்சை பெறுபவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்பம், சமையல், படைப்பாற்றல், நிர்வாகம் மற்றும் அழகுத் துறை சார்ந்த தொழில்சார் மறுவாழ்வு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

மதானி அரசாங்கத்தின் சமூகப் பாதுகாப்பு வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், நாட்டில் அதிகரித்து வரும் மறுவாழ்வுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 22 முதல் படிப்படியாக செயல்பட்டு வரும் இந்த மையத்தில் இதுவரை 1,095 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆண்டுக்கு 3,000 நோயாளிகள் வரை தங்கிச் சிகிச்சை பெறும் வசதியுடன், ஒரே நேரத்தில் 700 பேருக்கு சேவை வழங்கும் திறன் இம்மையத்துக்கு உள்ளது.

இந்த நிகழ்வில் பேராக் முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ சாரானி முகமது, மனிதவள அமைச்சின் மூத்த அதிகாரிகள், SOCSO நிர்வாகத்தினர் மற்றும் மாநில அரசின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Scroll to Top