ஜெனீவா, 16 ஜூன் 2026 : உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ட்ரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சூடானில் ட்ரோன் போர் வேகமாக அதிகரித்து வருவதாகவும், இதன் விளைவாக பொதுமக்கள் உயிரிழப்புகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார். ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் ட்ரோன் தாக்குதல்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அவரது அலுவலகம் பதிவு செய்துள்ளது.
2023 ஏப்ரலில் சூடான் இராணுவத்திற்கும், விரைவு ஆதரவு படை (RSF) எனப்படும் துணை இராணுவ அமைப்பிற்கும் இடையே மோதல் வெடித்ததைத் தொடர்ந்து, நாடு கடுமையான உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளது. இந்த மோதலில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
குறிப்பாக கோர்டோஃபான் மற்றும் டார்பூர் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. சந்தைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் போன்ற பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள இடங்களும் தாக்குதல்களுக்கு இலக்காகி வருவதாக கூறப்படுகிறது.
சூடானில் நடைபெற்று வரும் மோதல் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக மாறியுள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. சுமார் 34 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகளை நம்பி வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகளை குறிவைக்கும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.






