என் தமிழ்

19வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவை தொடக்கி வைத்தார் எல். முருகன்

மும்பை, 16 ஜூன் 2026 : ஆவணப்படங்கள், குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் திரைப்படங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான 19வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவை (MIFF 2026) மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் நேற்று மும்பையில் தொடக்கி வைத்தார்.

மும்பையின் தாதரில் உள்ள ரவீந்திர நாட்ய மந்திரில் நடைபெற்ற தொடக்க விழாவில், திரைப்படத் துறை பிரமுகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய எல். முருகன், இந்தியா இன்று உலகளவில் படைப்பாற்றலின் சக்திவாய்ந்த மையமாக உருவெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் கதைகள் உலக மக்களை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை என்றும், நாட்டின் படைப்பாற்றல் திறன் உலக அரங்கில் தனித்துவமாக திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை 2025 ஆம் ஆண்டில் 9 சதவீத வளர்ச்சியடைந்து ₹2.78 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும், டிஜிட்டல் ஊடகம் முதல் முறையாக ₹1 லட்சம் கோடி வருவாயை கடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மும்பை சர்வதேச திரைப்பட விழா, தெற்காசியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ஆவணப்பட, குறும்பட மற்றும் அனிமேஷன் திரைப்பட விழாவாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு விழாவில் 34-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 200-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

ஜூன் 15 முதல் 21 வரை நடைபெறும் இந்த விழா, உலகெங்கிலும் உள்ள திரைப்படக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் முக்கிய சர்வதேச நிகழ்வாக அமைந்துள்ளது.

Scroll to Top