இஸ்கந்தர் புத்ரி, 31 மே 2026 : வாழ்க்கைச் செலவின உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜொகூர் மாநிலத்தின் ‘ஜுவாலான் காசிஹ் ஜொகூர்’ (Jualan Kasih Johor) திட்டத்திற்காக கூடுதலாக RM30 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த கூடுதல் ஒதுக்கீட்டின் மூலம், 2026ஆம் ஆண்டிற்கான மொத்த நிதி RM45.4 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ஜொகூர் முதலமைச்சர் டத்தோ ஒன் ஹபீஸ் காசி தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் 750,000-க்கும் மேற்பட்ட ஜொகூர் குடும்பங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களிடமிருந்து கிடைத்த மிகுந்த வரவேற்பும் நேர்மறையான கருத்துகளும் இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் கூறினார். மக்கள் அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் பெறும் வாய்ப்பை மேலும் விரிவுபடுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, மாநிலம் முழுவதும் 336 இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த RM15.4 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ‘ஜுவாலான் காசிஹ் ஜொகூர்’ திட்டத்திற்காக மாநில அரசு RM26 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது. வாழ்க்கைச் செலவின சுமையை குறைக்கும் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த திட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக RM15 மதிப்பிலான ‘ஜுவாலான் கொம்போ காசிஹ்’ தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு கோழி, ஒரு தட்டு முட்டை மற்றும் இரண்டு லிட்டர் சமையல் எண்ணெய் அடங்குவதால், குடும்பங்களின் அன்றாட செலவினங்களை குறைக்க உதவுகிறது.
ஜொகூர் மாநில சட்டமன்றத்தின் 15வது அமர்வின் ஐந்தாவது கூட்டத் தொடரில் வாழ்க்கைச் செலவினம் மற்றும் மக்களின் நலன் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தபோது முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.






