சென்னை, 27 மே 2026 : உலகளாவிய திரைப்படம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்கள் மற்றும் தொழில் தலைவர்களை கௌரவிக்கும் 18வது எடிசன் விருது வழங்கும் விழாவில், பல்வேறு திரைப்பட விருதுப் பிரிவுகளுக்கான விருது வழங்குநராக அழைக்கப்பட்டமை பெருமைக்குரியதாக அமைந்ததாக தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான விழா, திரைப்படம், கலை மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களை ஒன்றிணைத்தது. பல ஆண்டுகளாக கலைச் சிறப்பையும் கலாச்சார சாதனைகளையும் கொண்டாடி வரும் திரு. செல்வகுமார் மற்றும் எடிசன் விருதுகள் ஏற்பாட்டுக் குழுவினரின் அர்ப்பணிப்பிற்கு அவர் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.


மேலும், மலேசியாவின் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு (MOTAC), 2026ஆம் ஆண்டிற்கான எடிசன் விருதுகளுக்கு ஆதரவளிக்கும் கூட்டாளராக இணைந்திருப்பது, மலேசியா மற்றும் தமிழ்நாடு இடையேயான கலை மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த யுனேஸ்வரன் ராமராஜ், இந்த மேடை சினிமா, கலை மற்றும் படைப்புத் தொழில்கள் துறைகளில் மலேசியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே புதிய ஒத்துழைப்புகளை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.







