டெக்சாஸ், 24 மே 2026 : SpaceX நிறுவனத்தின் அதிநவீன “ஸ்டார்ஷிப் V3” ராக்கெட் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட், விண்வெளி ஆய்வில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
சுமார் 407 அடி உயரம் கொண்ட இந்த ராக்கெட், ஸ்பேஸ்.எக்ஸின் இதுவரையிலான மிகவும் சக்திவாய்ந்த ஸ்டார்ஷிப் வடிவமாகும். சோதனையின் போது 22 மாதிரி ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டபோதிலும், ராக்கெட் பெரும்பாலான இலக்குகளை எட்டியதாக ஸ்பேஸ்.எக்ஸ் தெரிவித்துள்ளது. ஒரு ராப்டர் இயந்திரம் செயலிழந்த நிலையிலும், விண்கலம் தனது பயணத்தை தொடர்ந்து இந்தியப் பெருங்கடலில் கட்டுப்பாட்டுடன் இறங்கியது.
இந்த சோதனை, எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு மனிதர்களையும் சரக்குகளையும் அனுப்பும் திட்டங்களுக்கு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்திற்கும் இந்த ஸ்டார்ஷிப் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.





