என் தமிழ்

TM ISTAF 2026 : தாய்லாந்தை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்ற மலேசியா

24 மே 2026 : TM ISTAF 2026 உலக செபக்தக்ரா கோப்பை அணிப்பிரிவு இறுதிப்போட்டியில் தாய்லாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி மலேசியா உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கோலாலம்பூரிலுள்ள டிட்டிவாங்சா மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல் ரெகுவில் முகமது ஸுல்கிஃப்லி அப்துல் ரசாக், முகமது அஃபிபுடின் முகமது ரசாலி மற்றும் ஐடில் ஐமான் ஜாவாவி ஆகியோர் இணைந்து மலேசியாவுக்கு வெற்றி பெற்றுத் தந்தனர். அவர்கள் 15-9, 13-15, 15-12 என்ற செட் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தினர்.

இரண்டாவது ரெகுவில் முகமது ஹாசிக் ஹைருல் நிசாம், முகமது அஸ்லான் அலியாஸ் மற்றும் பார்ஹான் ஆதம் ஆகியோர் களமிறங்கினர். எனினும், இந்த ரெகுவில் தாய்லாந்து 15-6, 15-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தது.

முடிவை நிர்ணயித்த மூன்றாவது ரெகுவில் முகமது ஸரிப் மரிக்கான் இப்ராஹிம் மரிக்கான், முகமது ஹபிஸுல் ஹயாசி அடேனான் மற்றும் அமிருல் சாஸ்வான் அமிர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டை மலேசியா 15-13 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் 14-14 என இருந்தபோது, தாய்லாந்து அணி ஆட்டத்தை தொடர மறுத்ததால் நடுவர் மலேசியாவுக்கு வெற்றியை வழங்கினார்.

இதன் மூலம் மலேசியா தங்கப் பதக்கத்தை வென்றது. தாய்லாந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றது. இந்தோனேசியா மற்றும் கொரியா அணிகள் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றின.

Scroll to Top