என் தமிழ்

குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு : மலேசியாவின் சாதனைகளை பகிர்ந்த KPWKM

புத்ராஜயா, 23 மே 2026 : பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், குழந்தைகளின் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் கீழ் மலேசியாவின் கடந்த மூன்று தசாப்த காலப் பயணத்தை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மலேசியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக நாட்டின் முன்னேற்றங்கள், சவால்கள் மற்றும் எதிர்கால அர்ப்பணிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது, பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் நான்சி சுக்ரி, “தொடரும் உடன்படிக்கை : குழந்தைகளின் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் கீழ் மலேசியாவின் பயணம்” என்ற நூலை வெளியிட்டார்.

இந்த நூல், குழந்தைகளின் உரிமைகள் தொடர்பாக மலேசியா மேற்கொண்ட சாதனைகள், கொள்கைகள் மற்றும் நீண்டகால முயற்சிகளை பதிவு செய்கிறது.

மேலும், அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் மசியா சே யூசோஃப், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசாங்க முகமைகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் கொள்கை வரைமுறைகள் குறித்து விளக்கமளித்தார். அதேவேளை, 2027 முதல் 2031 வரையிலான காலப்பகுதிக்கான CRC குழு உறுப்பினர் பதவிக்கான மலேசியாவின் வேட்பாளராக யாஸ்மீன் ஷெரீஃப் அறிமுகப்படுத்தப்பட்டார்.

சர்வதேச அளவில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் மலேசியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நியமனம் பிரதிபலிப்பதாக அமைச்சகம் தெரிவித்தது.

இந்த நிகழ்வில், வெளியுறவு அமைச்சகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஹ்மத் ஃபைசல் முஹம்மது, KPWKM துணைப் பொதுச் செயலாளர் முகமது தாவூத் முகமது ஆரிஃப் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Scroll to Top