என் தமிழ்

லெபனனில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் : மருத்துவ பணியாளர்கள் உட்பட 10 பேர் பலி

லெபனன், 23 மே 2026 : லெபனனின் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சிறுமி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், எல்லைப் பகுதிகளில் மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தெற்கு லெபனானின் ஹனுயே கிராமம் மற்றும் டெய்ர் குவானன் அல் நஹ்ர் பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய சுகாதார சங்கத்தைச் சேர்ந்த நான்கு மருத்துவ உதவியாளர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் சிரியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரும், அமல் இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு மருத்துவ உதவியாளர்களும் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என லெபனான் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேவேளை, ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளையே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

போர்நிறுத்த முயற்சிகள் தொடர்ந்தாலும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top