புத்ராஜெயா, 04 மே 2026 : மலேசியாவில் “கார்ப்பரேட் மாபியா” தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் நிலையை உடனடியாக விளக்க வேண்டும் என தேசிய காவல்துறைத் தலைவரை கோபிந்த் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், அமைச்சரவை இந்த விவகாரத்தில் கவலை தெரிவித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது முதல் சுமார் இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன என அவர் குறிப்பிட்டார். எனவே, விசாரணையின் முன்னேற்றம் குறித்து வெளிப்படைத்தன்மை அவசியம் என அவர் தெரிவித்தார்.
செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் நபர்கள் விசாரணைக்காக விசாரிக்கப்பட்டுள்ளனரா என்பதை தேசிய காவல்துறைத் தலைவர் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை என்பதால், சம்பந்தப்பட்ட அனைவரையும் உள்ளடக்கும் வகையில் விசாரணை விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த விவகம் பொதுமக்கள் நலனுடன் தொடர்புடையதாக இருப்பதால், நாட்டின் சந்தை மற்றும் தேசிய நிறுவனங்களின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். ஆகவே, குற்றச்சாட்டுகள் சட்டத்தின் அடிப்படையில் முழுமையாக விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த விசாரணை காவல்துறைக்கு மட்டும் அல்லாமல், பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் உட்பட்டதாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
பங்குகள் கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளனவா அல்லது சந்தை சூழ்ச்சி நடைபெற்றுள்ளதா போன்ற அம்சங்களையும் அந்த ஆணையம் ஆய்வு செய்துள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறு, ஜனநாயக செயற்பாட்டு கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சரான கோபிந்த் சிங் தேவ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.





