ஜோகூர், 02 மே 2026 : நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் இருப்பதை வலியுறுத்தும் வகையில், ஜோகூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்த இந்திய இளைஞர்களுடனான அர்த்தமுள்ள சந்திப்பு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜோகூர் மாநில நிர்வாக சபை உறுப்பினரும், மஇகா மாநிலத் தலைவருமான ரேவன் குமார், அர்விந்த் கிருஷ்ணன் உள்ளிட்ட உள்ளூர் தலைவர்கள் கலந்து கொண்டு, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சி, இளைஞர்களின் ஒற்றுமை, போராட்ட மனப்பாங்கு மற்றும் எதிர்கால திசையை வலுப்படுத்தும் தளமாக அமைந்தது. உரைகள் மட்டுமன்றி, திறந்த கலந்துரையாடல் அமர்வும் இடம்பெற்று, இளைஞர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும், சவால்களை பகிரவும், புதிய யோசனைகளை முன்வைக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், ஏகேபிகே, தேகுன் நேஷனல் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் சொத்து மேலாண்மை பிரதிநிதிகள் கலந்து கொண்டு, நிதி மேலாண்மை, தொழில் முனைவு மற்றும் இளைஞர் மேம்பாடு தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் வாய்ப்புகளை பகிர்ந்தனர்.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த மோகன் அருணாசலம் மற்றும் ஜோகூர் மாநில மஇகா இளைஞர் அணியினருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இத்தகைய முயற்சிகள் இளைஞர்களை முன்னேற்றம் நோக்கி வழிநடத்தும் முக்கிய ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.







