நெகிரி செம்பிலான், 01 ஆகஸ்ட் 2026 : நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை ரொம்பினில் நிறைவு செய்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜெராம் படாங் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் மணிவண்ணன் கோவிந்திற்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சுத்தமான நிர்வாகம், நல்லாட்சி, இஸ்லாமிய மதக் கொள்கைகளுக்கு மரியாதை, மலாய் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், பிற இன மக்களின் நலனையும் உறுதி செய்வதில் பக்காத்தான் ஹராப்பான் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் இனவாதத்தையும் வெறுப்பு அரசியலையும் தூண்டி, சீன மற்றும் இந்திய சமூகங்களின் நாட்டுப்பற்றையே கேள்விக்குறியாக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், மக்களைப் பாதுகாப்பது என்பது வெறும் அரசியல் முழக்கங்களால் அல்ல, நேர்மையான நிர்வாகம் மற்றும் மக்களுக்கான சேவையால்தான் சாத்தியமாகும் என்றார்.
மலாய் தலைவர்களால் நிர்வகிக்கப்பட்ட சில அமைப்புகளிலேயே தவறான நிர்வாகம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் காரணமாக பில்லியன் கணக்கில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அன்வார், பிரச்சினை இனம் அல்லது தோல் நிறம் அல்ல; நேர்மை, திறமை மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பே முக்கியம் என்று வலியுறுத்தினார்.
மாநில முதல்வர் அமினுடின் ஹரூன் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசின் சாதனைகளை கருத்தில் கொண்டு, மக்கள் தங்கள் வாக்கை அளிக்க வேண்டும் என்றும், வெறுப்பு மற்றும் இனவாத அரசியலுக்கு இடமளிக்காமல் நல்லாட்சிக்கு ஆதரவு வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நெகிரி செம்பிலான் மக்களின் எதிர்காலத்திற்காக தூய்மையான, நம்பகமான மற்றும் மக்களுக்காக உழைக்கும் நிர்வாகத்தை தேர்ந்தெடுக்குமாறு அவர் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.






