லங்காவி, 05 ஏப்ரல் 2026 : கடந்த வியாழக்கிழமை தொடங்கி இன்று மாலை வரை நடைபெற்ற மலேசிய சர்வதேச படகு கண்காட்சி (MyBOS) 2026, முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதுடன், கடல் சார்ந்த தொழில்துறைக்கு புதிய பார்வையையும் வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு நிகழ்வின் சிறப்பம்சமாக, நோர்வே நாட்டைச் சேர்ந்த 130 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ‘எஸ்.வை. வேகா 1892’ என்ற பாரம்பரிய படகு கலந்து கொண்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படகை ஷேன் கிரேஞ்சர் மற்றும் மெக்கி மேகோன் என்ற தம்பதிகள் இயக்கி வருகின்றனர். அவர்கள் ஆசியான் பிராந்தியத்தில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
“2004 சுனாமி பேரழிவிற்குப் பின்னர் நாங்கள் மனிதாபிமான சேவையில் ஈடுபட்டு வருகிறோம். இந்த சேவைகள் அனைத்தும் முழுமையாக தன்னார்வ அடிப்படையில் நடைபெறுகின்றன. பெரிய நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி உதவியும் இல்லை.
எங்களுக்கு உதவ விரும்பும் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் சிறிய அளவிலான நன்கொடைகளே இந்த பணிகளை முன்னெடுக்க உதவுகின்றன. அதே நேரத்தில், வழங்கப்படும் உதவிகள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் விரும்புகிறோம்,” என ஷேன் கிரேஞ்சர் தெரிவித்தார்.
லங்காவி பகுதியில் உள்ள பொதுமக்கள், இன்றைய மாலை வரை ராயல் லங்காவி யாட் கிளப்பில் தங்கியுள்ள இந்த படகைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெறலாம்.
முன்னதாக, இந்த நிகழ்வை மலேசிய போக்குவரத்து அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் டத்துக் ஸ்ரீ ஜன சாந்திரன் முனியாயன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில், நவீன கடல் தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆடம்பரப் படகுகள் பலவும் காட்சிப்படுத்தப்பட்டு, உலகளாவிய கடல் தொழில்துறையின் முன்னேற்றத்தை பிரதிபலித்தன.





