சென்னை, 19 மார்ச் 2026 : தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தேர்தல் நாளில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மேலும் 5 அரசு துறைகளின் ஊழியர்களுக்கும் தபால் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஊழியர்கள் இப்போது தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம்.
மேலும், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் இந்த வசதி தொடர்ந்தும் வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் Form 12D மூலம் விண்ணப்பித்து, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளில் உள்ளவர்கள் தங்கள் துறை நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் தபால் வாக்கு பெற விண்ணப்பிக்கலாம். அதேபோல், தேர்தல் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் இந்த வசதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
சேவை வாக்காளர்களுக்கு மின்னணு தபால் வாக்கு (ETPBS) அனுப்பப்படும் என்றும், அனைத்து தபால் வாக்குகளும் மே 4-ஆம் தேதி காலை 8 மணிக்குள் தேர்தல் அதிகாரிகளிடம் சேர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




