சென்னை, 16 மார்ச் 2026 : விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக படக்குழு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. சுப்ரீம் கோர்ட் மற்றும் சென்னை ஐகோர்ட்டு வரை சென்ற வழக்கை இறுதியில் திரும்பப்பெற்ற அவர்கள், படத்தை மறுதணிக்கைக்காக அனுப்பிவைத்தனர். இதற்கிடையில், திரைப்படத்தின் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
பின்னர், தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக படம் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. இதன்படி கடந்த மார்ச் 9-ஆம் தேதி மறுஆய்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அன்றைய ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மறுஆய்வு குழுவினர் நாளை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு தணிக்கை வாரியம் விரைவில் அழைப்பு விடுக்கும் என கூறப்படுகிறது. தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் இந்த படம் இதுவரை வெளியாகாமல் தாமதமாகியுள்ளது. நாளை மறுஆய்வு நடைபெறாவிட்டால், அது வரும் 19-ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தேர்தலுக்குப் பிறகே வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது.




