புதுடெல்லி, 15 மார்ச் 2026 : நாட்டில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் இந்த ஆண்டில் நடைபெற உள்ளன. இதையடுத்து, தேர்தல் நடைபெறும் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவித்தது.
அதன்படி, கேரளா (140 தொகுதிகள்), அசாம் (126 தொகுதிகள்) மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் (30 தொகுதிகள்) ஆகிய இடங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். இவற்றின் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் (294 தொகுதிகள்) இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ஆம் தேதியும் நடைபெறும். இதற்கான வாக்கு எண்ணிக்கையும் மே 4-ஆம் தேதியே நடைபெறும்.
தமிழகத்தில் (234 தொகுதிகள்) ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். தமிழகத்திற்கான வாக்கு எண்ணிக்கையும் மே 4-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசின் தற்போதைய பதவிக்காலம் மே 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 15-ஆம் தேதி, மேற்கு வங்காளம் மே 7-ஆம் தேதி, அசாம் மே 20-ஆம் தேதி மற்றும் கேரளா மே 23-ஆம் தேதி நிறைவடைகிறது.
மேற்கு வங்காளம் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதே நேரத்தில், அனைத்து ஐந்து மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் ஒரே நாளான மே 4-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




