என் தமிழ்

எரிவாயு தட்டுப்பாடு: பெட்ரோலியத்துறை மந்திரியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி, 10 மார்ச் 2026 : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களும், அதற்கு பதிலடியாக ஈரான் மேற்காசிய நாடுகளை குறிவைத்து நடத்தும் தாக்குதல்களும் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிலைமையால் வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழ்நிலையின் தாக்கம் பல நாடுகளில் வெளிப்படத் தொடங்கியுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் விலையும் அதிகரித்துள்ளது. அதேபோல் வங்காளதேசத்திலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தென் மாநிலங்களில் ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பெங்களூரு மற்றும் புதுச்சேரியில் சில உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை தடை செய்யக்கூடாது என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், நாடு முழுவதும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பில், நாட்டில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்களின் இருப்பு நிலை குறித்து பிரதமர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் பிரதமர் ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படாமல் இருக்க மாற்று வழிகள் மற்றும் பிற நாடுகளிடமிருந்து எரிபொருள் பெறுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Scroll to Top