மெல்போர்ன், 02 மார்ச் 2026 : மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணியை ஆஸ்திரேலியா சக்திவாய்ந்த ஆட்டத்தின் மூலம் முறியடித்தது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி கண்டிருந்த நிலையில், தொடரின் கடைசி போட்டியும் அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கே சாதகமாக முடிந்தது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி இணைந்து இந்திய பந்துவீச்சாளர்களை சிரமப்படுத்தினர். ஹீலி 158 ரன்கள் குவித்து பிரமாண்ட இன்னிங்ஸ் ஆடியதுடன், மூனி 106 ரன்கள் எடுத்து சதமடித்தார். அவர்களின் ஆட்டத்தின் பலனாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா 409 ரன்கள் குவித்தது.
410 ரன்கள் என்ற கடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது. மந்தனா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பிற பேட்ஸ்வுமன்கள் நல்ல தொடக்கம் பெற்றும் அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. சினே ராணா 44 ரன்களும், ஜெமிமா 42 ரன்களும் எடுத்து ஓரளவு போராடினர். இருப்பினும் இந்திய அணி 45.1 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 185 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் அலானா கிங் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய பேட்டிங்கை சிதறடித்தார்.





