ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது மூன்றாவது நாள் சுற்றுப்பயணத்தில் தலைநகர் டோக்கியோவில் உள்ள 136 ஆண்டுகள் பழைமையான டைமெய் அரசு துவக்கப்பள்ளிக்கு சென்றார்.
இங்குள்ள மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டம் குறித்து ஆவலுடன் கேட்டறிந்த மோடி, 21-ம் நூற்றாண்டை ஆசியாவுக்கே உரித்தானதாக ஆக்கும் நோக்கத்தில் இந்திய மக்களுக்கும் ஜப்பான் மொழியை கற்பிக்க இங்குள்ள ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவுக்கு வந்து அங்குள்ள மக்களுக்கு நேரில் பயிற்சியளிக்க விரும்பும் ஆசிரியர்களும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் வரவேற்கப்படுவார்கள் என்று தெரிவித்த பிரதமர், ‘136 ஆண்டுகால பழைமையான இந்த துவக்கப்பள்ளியில் கற்பதற்காக வயது முதிர்ந்த மாணவனாக நான் இங்கு வந்துள்ளேன்’ என்று குறிப்பிட்டார்.
ஆன்லைன் மூலம் ஜப்பானிய கல்வித்திட்டத்தை இந்தியர்களுக்கு போதிப்பதன் மூலமாகவும், இங்குள்ள ஜப்பானியர்களுக்கு இந்தியப் பாடதிட்டங்களை கற்பிப்பதன் வாயிலாகவும் இரு மொழிகளுக்கிடையில் உள்ள பொது மற்றும் சமூக மதிப்பீடுகளை பரிமாறி, ஒட்டுமொத்த மானிட இனத்தை பயனுறச் செய்ய வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
64 வயது மாணவராக ஜப்பான் பள்ளியில் பாடம் பயிலச் சென்ற பிரதமர் மோடி
