ஷா ஆலாம், 16 அக்டோபர் 2025 : தேசிய நட்பு நற்பண்பு நலச்சங்கம், ஷா ஆலாம் 25வது பிரிவில் நடைபெறும் தீபாவளி கார்னிவல் பசாரில், கடை வாடகை வசூல் தொடர்பாக சில வியாபாரிகள் எழுப்பிய கேள்விகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
வியாபாரிகள் அளித்த புகாரின் படி, ரூம்1,000 முதல் ரூம்1,500 வரை வசூலிக்கப்பட்ட கடை வாடகை தொகைகள், ஷா ஆலாம் நகரமன்றத்தின் (MBSA) அதிகாரப்பூர்வ கணக்கில் அல்லாமல், ஒருவரின் தனிப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அச்சங்கத்தின் தலைவர் திரு. ஜோசப் பிரகாஷ் கூறியதாவது:
“ஒரு மன்ற உறுப்பினர் ஒவ்வொரு கடைக்கும் canopy வாடகை ரூம்1,300 (இந்த ஆண்டில்) மற்றும் ரூம்1,500 (கடந்த ஆண்டில்) எனக் கொள்கின்றாரா? இதைப் பற்றி MBSA அறிந்ததா? இப்போது கேள்வி — யார் மோசடி செய்கிறார்கள், MBSA தானா அல்லது அந்த மன்ற உறுப்பினரா?”
அவர் மேலும் தெரிவித்ததாவது, இதேபோன்ற நிலை கடந்த ஆண்டும் ஏற்பட்டதாகவும், அப்போது கூட தனிப்பட்ட கணக்கில் தொகை செலுத்தப்பட்டதாகவும் கூறினார். இந்த முறை சுமார் 20 வியாபாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜோசப் அவர்கள், அந்த கணக்கை வைத்திருப்பவர்களில் ஒருவராக ஒரு பெண்ணின் பெயரையும் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
“இது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். ஒரு மன்ற உறுப்பினர் தனது தனிப்பட்ட கணக்கை அதிகாரப்பூர்வ வசூலுக்கு பயன்படுத்துவது முற்றிலும் தவறு,” என்று அவர் வலியுறுத்தினார்.
சில வியாபாரிகள் தங்களை ஊடகங்களிடம் பேசாதபடி சமாதானப்படுத்த முயற்சி செய்யப்பட்டதாகவும், “செலுத்திய பணத்தைத் திருப்பி செலுத்துவோம்” என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஏமாற்றப்பட்ட அனைத்து வியாபாரிகளுக்கும் நீதியை நாங்கள் கேட்கிறோம். MBSA உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த வசூல் சட்டப்படி அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்,” என அவர் கூறினார்.
இறுதியாக, ஷா ஆலாம் மாநகராட்சியின் டத்தோ பண்டார் திங்களுக்குள் அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
#MBSA #ShahAlam #SPRM #DiwaliBazaar







