மலேசியாவை உலுக்கிய மற்றொரு விமானப் பேரிடர், MH17. அன்றைய நள்ளிரவை உலுக்கிய அந்த தகவல், உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
மலேசியாவில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் சம்பந்தப்பட்ட விமான விபத்துக்களைச் சந்தித்ததில்லை இந்த நூற்றாண்டு தலைமுறை. பாதுகாப்பான ஆகாயப் பயணம் அமையும் என்ற மலேசிய மக்களின் அனைத்துலகப் பயணக் கனவுகளைத் தவிடுபொடியாக்கிவிட்டது, இவ்வாண்டு நிகழ்ந்த MH370 மற்றும் MH17 விமான விபத்துகள்.
கடந்த மார்ச் 8-ஆம் தேதி, கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிப் பயணித்தைத் தொடங்கி மாயமான MH 370 விமானத்தின் மர்ம முடிச்சு என்றாவது ஒரு நாள் அவிழும் என்ற கனவோடு ஒவ்வொரு நாள் விடியலும் நகர்ந்து கொண்டிருக்க ஜூலை 17-ஆம் தேதி MH 17 விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் மலேசியா மட்டுமின்றி உலக மக்களை மீண்டும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
298 பேரில் 43 மலேசியர்கள். இவர்களின் 20 பேரின் சடலங்கள் முதற்கட்டமாக தாயகம் கொண்டுவரப்பட்டுள்ளதையடுத்து, இன்று தேசிய அளவிலான துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இன்றையக் காலைப் பொழுதில், இன்று காலை வேலைக்குச் செல்வோர் பலர், வண்ண உடைகளைத் தவிர்த்து துக்கத்தைப் பிரதிபலிக்கும் கறுப்பு, சாம்பல் நிற உடைகளை அணிந்திருந்தனர். அரசாங்கத்தின் கோரிக்கை ஒரு புறம் இருந்தாலும், நம்மில் பலரது கண்கள் இன்றைய தினசரிகளில் மூழ்கியிருந்தது, MH17 பயணிகளின் மரணம் மலேசிய மக்களின் மனங்களில் ஒரு ரணத்தையும் அதனைத் தொடர்ந்து இன்றைய தேசிய ரீதியிலான துக்கத்தில் இணையும் மனப்பக்குவத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் கூறவேண்டும்.
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம். இன்று 20 சடலங்கள் தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளன. இனி இவர்களின் ஆத்மாக்கள் தாய்மண்ணில் நிம்மதியாக உறங்கட்டும். இனியும் வேண்டாம் இன்னொரு பேரவலம் என பிரார்த்திப்போம்.