ஐ.எஸ். தீவிரவாதிகளால் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதை பார்த்து உலகமே திகைத்து நிற்கிறது: ஒபாமா

ஐ.எஸ். தீவிரவாதிகளால் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதை பார்த்து உலகமே திகைத்து நிற்கிறது: ஒபாமா

obama

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ‘ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் பிடித்து வைத்துள்ள பகுதிகளை மீட்கவும், மேற்கொண்டு தாக்குதல் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அவர்கள் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குல் நடத்துகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் செய்தி சேகரிக்கும் அமெரிக்க பத்திரிகை நிருபரை தலை துண்டித்து படுகொலை செய்தனர்.

இந்த நிருபரின் பெயர் ஜேம்ஸ் போலே. இவர் சிரியாவில் செய்தி சேகரித்து வந்தார். கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 22–ந்தேதி முதல் இவரை காணவில்லை. இவருடன் ஸ்டீவன் ஜோயல் கோட்லாப் என்ற நிருபரும் மாயமானார்.

இந்த நிலையில் ‘ஐ.எஸ்’ தீவிரவாதிகள் ‘யூடியூப்’ மற்றும் ‘அல் புர்கான் மீடியா’ ஆகிய இணைய தளங்களில் ஒரு வீடியோவை ஒளிபரப்பினர். 4 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில் நிருபர் ஜேம்ஸ் போலேயின் தலை துண்டித்து கொலை செய்யப்படும் காட்சி இடம் பெற்றிருந்தது. தீவிரவாதிகளின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஒபாமா, ஒட்டுமொத்த உலகமே பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலே கொல்லப்பட்ட விதத்தை பார்த்து திகைத்து நிற்கிறது என்றார். கொடூரமான இச்செயலை செய்த இந்த தீவிரவாத புற்றுநோயை ஒழிக்க பொதுவான முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும், அப்போது தான் இப்படிப்பட்ட தாக்குதல்கள் பரவாமல் தடுக்க முடியும் எனவும் ஒபாமா மேலும் கூறியுள்ளார்.