கோலாலம்பூர், 27 ஜூலை 2025 : தமக்கு எதிராக நடத்தப்பட்ட “தூருன் அன்வார்” பேரணி வெறுப்பை விதைக்கும் நோக்கம் கொண்டது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், உண்மை என்னவென்றால். அப்பேரணி ஒன்றும் தனிப்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு அல்ல,
மாறாக பொருளாதாரம், சமூக நீதி, மக்கள் நலக் கொள்கைகள், நிறைவேறாத சீர்திருத்த வாக்குறுதிகள் முதலானவற்றில், அவர் கண்டுள்ள தோல்விகளுக்கு பல்லின மக்கள் விடுத்திருக்கும் ஒரு கடும் எச்சரிக்கையாகும்.
“வெறுப்பு” என்பது, மக்களின் வாதங்களுக்கு உண்மைகளுடன் பதிலளிக்க இயலாதபோது, ஆளும் தரப்பு பயன்படுத்தும் பழைய உத்தியாகும். மக்கள் அவர்களது எதிர்ப்பை சட்டபூர்வமாகவும் நெறியாகவும் நாகரிகமாகவும் வெளிப்படுத்துவதற்கான ஒரு ஜனநாயக தளமாக “தூருன் அன்வார்” பேரணி விளங்கியது.
இது நடப்பிலுள்ள ஆட்சியின் ஆணவப் போக்கிற்கு எதிரான பதிலடியே தவிர, வெறுப்பினால் மேற்கொள்ளப்பட்டது அல்ல. நாட்டின் நிர்வாக தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கையை இழந்த மக்கள் தார்மீகப் பொறுப்பேற்று இப்பேரணியை நடத்தியுள்ளனர்.
ஒரு காலத்தில் சீர்திருத்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்த அன்வார், தற்போது மக்கள் அதே வழியில் அவரைப் பதவி விலகக் கோருவதை ஏற்க முடியவில்லை. முன்பு ஆர்ப்பாட்டங்கள் மக்களின் குரலாகக் கருதப்பட்டன. இப்போது, அது தனக்கு எதிராகத் திரும்பும்போது, வெறுப்பை விதைப்பதாக, அவர் குற்றம்சாட்டுகிறார்.
“தூருன் அன்வார்” பேரணியில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள், சாமானிய மக்கள் பங்கேற்றுள்ளனர். அது, அன்வார் தலைமைத்துவத்தின் மீது மக்கள் கொண்டுள்ள பெருத்த ஏமாற்றத்தை உறுதிப்படுத்துகிறது.
தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக ஒன்றும், அன்வார் இப்ராஹிம் மீது மக்கள் கோபத்தில் இல்லை. மாறாக, வெறும் பேச்சில் மட்டுமே வல்லவராக இருக்கும் அவர், தங்களின் நலன்களைக் காக்கத் தவறியதாலேயே, மக்கள் அன்வாரின் தலைமையின் மீது நம்பிக்கையை இழந்து கோபத்தில் உள்ளனர்.
எனவே, “தூருன் அன்வார்” என்ற கோஷம் வெறுப்பின் அடையாளமல்ல, மாறாக லட்சக்கணக்கான மலேசிய மக்களின் நம்பிக்கையைப் பொய்யான வாக்குறுதிகளாலும் அரசியல் நாடகங்களாலும் ஏமாற்றாத, உண்மையான மாற்றத்தை வேண்டி நிற்கும் மக்களின் உரத்த குரலாகும்.
திரு. என். பாலசுப்ரமணியம் JP
பாஸ் ஆதரவுப் பேரவைத் தலைவர்.





