கோலாலம்பூர், 01 ஜூலை 2025 : உலகளாவியளவில் அறிவியல், ஆன்மிகம் மற்றும் சமூக நலன்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளுக்காக தாஸ்லி நிறுவனத்தின் இயக்குனரும் தன்முனைப்பு பேச்சாளருமான டத்தோ டாக்டர் ரவீ அவர்களுக்கு, அண்மையில், தமிழ்நாட்டில் உள்ள யூனிவர்சல் பீஸ் ஃபவுண்டேஷனில் நடைபெற்ற சர்வதேச லாரியேட்ஸ் அங்கீகார மாநாடு (International Laureates Recognition Conclave 2025) நிகழ்வில் Excellency in Wellness Award என்ற பெருமைமிக்க விருது வழங்கப்பட்டது.
இந்த விருது, உலகளவில் ஒருங்கிணைந்த நலவியல் (Integrative Wellness), ஆன்மிக ஒற்றுமை மற்றும் மனித மாறுதலுக்காக டத்தோ டாக்டர் ரவீ செய்த தொண்டைப் போற்றும் வகையில் வழங்கப்பட்டது. அவருடைய சாதனைகள், உலக நாடுகளில் ஒலி பரப்பியுள்ளன. மருத்துவம், மனநலம், ஆன்மிகம், கல்வி மற்றும் சமூக சேவைகள் ஆகிய துறைகளில் அவர் ஒரே நேரத்தில் செயல்பட்டு வருவதை இந்த விருது அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கிறது.
யு.என்.எஸ் ஆராய்ச்சி மையம் இந்த மாநாட்டை நடத்தியது. இது அறிவியல் மற்றும் சமூக நலவியல் துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிறுவனம். இந்த மாநாட்டின் சிறப்பு உரையாற்றியவர்களில், யூனிவர்சல் பீஸ் ஃபவுண்டேஷனின் நிறுவனர் குருமகான் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி ஜெயமணி அவர்கள், “நலம் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மா மூன்றின் இசைவு. டத்தோ டாக்டர் ரவீ நலவியல் என்ற பாதையில் ஒளிவிளக்காக விளங்குகிறார்” என பாராட்டினார்.
டத்தோ டாக்டர் ரவீ அவர்கள் தனது ஆரம்பக்காலத்திலிருந்தே சமூகம் மற்றும் அறிவியலை ஒரே தளத்தில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். நரம்பியல், சித்த மருத்துவம், யோகா மற்றும் பல்துறை மருத்துவம் ஆகியவற்றை இணைத்து, உலகின் பல பகுதிகளில் நலவியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி இதழ்களில் பிரசுரிக்கப்படுள்ளன.
மலேசிய அரசின் நலவியல் திட்டங்களிலும் பங்களித்து வருகிறார் டத்தோ டாக்டர் ரவீ. குறிப்பாக, வலுவான குடும்ப அமைப்பு, மனநல விழிப்புணர்வு, மற்றும் இளைஞர் ஆராய்ச்சி மேம்பாட்டு பங்களிப்புகள் ஆகியவையிலே அவர் முன்னணி இடம் வகிக்கிறார். மேலும், அவர் “Healing Without Borders” என்ற திட்டத்தின் மூலம் எல்லைகள் கடந்த மருத்துவ அணுகுமுறையை உலகளவில் ஏற்படுத்தி வருகிறார்.
இந்த விருது, இந்திய அரசின் மினிஸ்ட்ரி ஆஃப் கார்பரேட் அஃபயர்ஸ், ESIC, NGO தர்பன், மற்றும் 80G & 12A அங்கீகாரம் பெற்ற அமைப்புகளால் ஒப்புதல் பெற்றதாகும். இது, உலகளாவிய நலவியல் மற்றும் அறிவியல் நம்பிக்கைகளுக்கு ஓர் அடுத்த கட்டமாகவும், மலேசியாவுக்கு பெருமை சேர்த்த நற்சான்றிதலாகவும் கருதப்படுகிறது.
மாநாட்டின் நிறைவு உரையில், பிரிட்டனின் ராயல் சொசைட்டி ஆஃப் பயாலஜியின் தூதுவரும், யு.என்.எஸ் ஆராய்ச்சி மையத்தின் தலைமை ஆலோசகருமான டாக்டர் ஹேமச்சந்திரன் ரவிகுமார், “இந்த விருது ஒரு மருத்துவருக்கான வெற்றிக்காக மட்டும் அல்ல, மனிதநேயம் சார்ந்த மருத்துவ பணி எவ்வளவு அவசியமென நிரூபிக்கும் சான்றாகும். டத்தோ டாக்டர் ரவீ இந்த சிந்தனையை உலகளவில் எடுத்துச் செல்கிறார்” எனக் கூறினார்.
இந்தக் கௌரவம், மலேசியாவில் இருந்து ஒருவருக்கு கிடைக்கும் அரிய பெருமையாகும். உலகளாவிய நலவியல் இயக்கத்தின் தலைவனாக மலர்ந்துள்ள டத்தோ டாக்டர் ரவீ, அறிவியல், ஆன்மிகம் மற்றும் சமூக சேவை என்பவற்றின் சந்திப்புப் புள்ளியாகக் காட்சியளிக்கிறார்.





