சுங்கை நியோர், 02 ஜூலை 2025 : சுங்கை நியோர் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப்பள்ளி அருகே இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வர வந்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
போலீசார் தெரிவித்ததாவது, இன்று மாலை சுமார் 5.40 மணியளவில், 40 வயதிற்குட்பட்ட ஒரு நபர் தனது கார் மூலம் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தபோது, மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு இனந்தெரியாத நபர்கள் அவருடைய வாகனத்தை அணுகியுள்ளனர்.
தொடர்ந்து, அவர்களில் ஒருவர், ஓட்டுநர் பக்க கண்ணாடியில் நேராக துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. சில செய்திகள் படி, அந்த நபர் அங்கேவே உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றன. ஆனால் அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை இல்லை.
சம்பவத்தின் நேரத்தில் பள்ளி முடியும் நேரம் என்பதால், அந்த பகுதியில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலர் இருந்ததால், கூட்ட நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டன. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி, தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலுக்கான காரணம் மற்றும் குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இது ஒரு திட்டமிட்ட தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் தகவல்களுக்கு காத்திருக்கவும்.








