கோலாலம்பூர், 30 ஜூன் 2025 : 2025 ஏப்ரல் 1-ஆம் தேதி, புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த வாயுகுழாய் வெடிப்பு மற்றும் தீவிபத்து சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து, நாட்டில் வாயுகுழாய் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் கடும் அச்சத்தையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.
இந்த துயரமான நிகழ்வு, புத்ரா ஹைட்ஸ் மக்கள் சுதந்திரத்தையும் அமைதியையும் பாதித்ததோடு, அதேசமயம் நாடு முழுக்கவும் பரந்திருக்கும் வாயுகுழாய் வலையமைப்பின் பாதுகாப்பு நிலைமை குறித்த சீரிய சந்தேகங்களையும் தூண்டியுள்ளது. குறிப்பாக, மக்கள்தொகை அதிகம் கொண்ட வீட்டு பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் இதுபோன்ற வாயுகழிகள் ஓடுவதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து கவனம் தேவை.
Petronas Gas Berhad (PGB) நிறுவனம், SCADA தொழில்நுட்பம், ட்ரோன் மற்றும் ஒலி கண்டறியும் அமைப்புகள் போன்ற மேம்பட்ட கண்காணிப்பு முறைமைகள் 24 மணி நேரமும் இயங்குகின்றன என்று விளக்கினாலும், இவ்விபத்து எதிர்பாராத அபாயங்கள் இன்னும் நிலவுவதைக் காட்டுகிறது. எனவே, தற்போதுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
மலேசிய தொழிற்சாலை மற்றும் தொழிலாளி பாதுகாப்பு துறை (DOSH) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், இச்சம்பவத்தின் முக்கிய காரணம், வாயுகுழாய் கீழ் நிலத்தின் மென்மை மற்றும் ஈரப்பதமான நிலை எனக் கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்பப் பாராமீட்டுகளை பூர்த்தி செய்த அந்த குழாய்கள், கீழே போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் உடல் வலிமை குறைந்து கசிவு ஏற்பட்டு தீவிபத்தில் முடிந்துள்ளது.
மெல்லிய நிலத்தில் குழாய்கள் தொடர்ந்து அசைவதால் ஏற்பட்ட அழுத்தம் மற்றும் திரிபுகளால் குழாய்களில் ‘களிமை’ (fatigue striations) உருவாகி வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்தப் பின்னணியில், இவ்விபத்தை நாடு முழுக்க ஒரு விழிப்பூட்டும் அம்சமாகக் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. தேசிய வாயுகுழாய் அமைப்பின் முழுமையான பாதுகாப்பு ஆய்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும். இதன் முடிவுகள் பொதுமக்கள் காணக்கூடிய அபாயம் கொண்ட இடங்களை விவரிக்கும் வரைபடமாக வெளியிடப்பட வேண்டும்.
Petronas நிறுவனம் அமைத்துள்ள சார்பற்ற விசாரணை குழுவையும், மாற்றுப் பாதைகள் தொடர்பான திட்டத்தையும் வரவேற்கிறேன். இருப்பினும், நிகழ்ந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, முன்கூட்டியே தடுக்கும் முறைமை இருக்க வேண்டும்.
இதனை அடிப்படையாக கொண்டு நான் கீழ்க்கண்ட ஐந்து அவசர நடவடிக்கைகளை முன்மொழைக்கிறேன்:
- மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், கல்வி நிறுவனங்கள் அருகில் செல்லும் வாயுகுழாய்கள் மீது முதன்மை கொடுத்து, அனைத்து செயலில் உள்ள வாயுகுழாய்களின் விரிவான ஆய்வும் மதிப்பீட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- வாயுகுழாய்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பு மண்டலங்கள் (buffer zones) கட்டாயமாக வகுக்கப்பட வேண்டும். அதேபோல் எச்சரிக்கை பலகைகள் மற்றும் தொழில்நுட்ப தகவல்கள் தெளிவாகக் காணப்பட வேண்டும்.
- பொதுமக்கள் இடையே அவசரநிலை பயிற்சி அடிக்கடி நடத்தப்பட வேண்டும். வாயுகுழாய் கசிவு அல்லது வெடிப்பு நிகழும் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
- வாயுகுழாய் அமைவிடங்கள் பற்றிய தகவல் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்பட வேண்டும். இதனால் உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் சமூகங்கள் திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
- மூன்றாம் தரப்பினர் (சிவில் சமூகங்கள், NGO-க்கள், உள்ளாட்சி குழுக்கள்) வாயுகுழாய் பாதுகாப்பு ஆய்விலும் கண்காணிப்பிலும் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.
நமது நாட்டில் இன்னும் போதிய நேரமும், வளங்களும், நிபுணத்துவமும் இருக்கின்றன. மக்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக அவை சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், அடுத்ததாக ஒரு விபத்து நிகழும் வரை காத்திருக்கக் கூடாது.
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து, தேசிய உள்கட்டமைப்பு அபாய நிர்வாகத்திற்கு சீரிய எச்சரிக்கையாகும்.
நன்றி.
பாலசுப்ரமணியம் த/பெ நாசியப்பன் JP
மத்திய பாஸ் ஆதரவாளர்கள் மன்றத் தலைவர்
30 ஜூன் 2025





