புத்ராஜெயா, 18/06/2025 : மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) கீழ் இயங்கும் பரிந்துரை மற்றும் தடுப்பு குழு (PPPR), நாடு முழுவதும் ஊழலைக் குறைக்கும் நோக்கில், தேசிய அளவிலான ஒரு விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரச்சாரத்திற்கான திட்டத்தை 17/06/2025 அன்று வெளியிட்டது.
PPPR குழுத் தலைவி டத்தின் யாஸ்மின் அஹ்மட் மெறிகான், ஊழலைத் தடுக்கும் நிலையான நடவடிக்கைகள், சிறந்த நிர்வாகம் மற்றும் பொது கல்வியின் மூலமாக இந்த முயற்சி அமையப்பெறும் எனக் கூறினார்.
“இந்த பிரச்சாரம் ஊழலற்ற மலேசியாவை நோக்கி முன்னேறும் செயல் திட்டமாக இருக்கும். ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, ஒழுக்கத்தையும் நேர்மையையும் வளர்க்கும் நோக்கத்தில் இது அமையும்,” என அவர் PPPR 2025 இரண்டாவது கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த பிரச்சாரம் SPRM மற்றும் PPPR தலைமையில் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதில் SPRM-இன் அனைத்து சுயாதீன கண்காணிப்பு அமைப்புகள் —
ஊழல் தடுப்பு ஆலோசனை வாரியம் (LPPR),
ஊழல் தொடர்பான சிறப்பு குழு (JKMR),|
புகார் குழு (JKA),
செயல்பாடுகள் மதிப்பீட்டு குழு (PPO) ஆகியவை இணைந்துள்ளன.
மேலும், தனியார் துறை மற்றும் கல்வியாளர்களின் ஆதரவும் இதில் எதிர்பார்க்கப்படுகிறது.
SPRM துணைத் தலைமை ஆணையர் (தடுப்பு) மற்றும் PPPR இன் நிர்வாக உறுப்பினர் டத்தோ அஸ்மி கமருசமான் கூறுகையில், மாநில அரசுகளுடனான கலந்தாய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எனவும், அவர்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த தேசிய பிரச்சாரத்தின் திட்டமிடலில் பங்களிக்கும் எனவும் தெரிவித்தார்.
இதில் SPRM தடுப்பு பிரிவு இயக்குநர்கள் பங்கேற்றனர்.





