கோலாலம்பூர், 15/06/2025 : மலேசியாவில் சமீபத்தில் இடம்பெற்ற “கோவில் ஹராம்” என்ற வார்த்தை பயன்பாட்டைத் தொடர்ந்து, இந்திய சமுதாயத்தில் பெரும் வேதனையும் பதட்டமும் ஏற்பட்டுள்ளதாக பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் தொடர்பான விவகாரம் தொடர்பாக, அந்த கோவிலை “கோவில் ஹராம்” என அடையாளப்படுத்தியதற்கு சமூகத்தில் கடும் எதிர்வினை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பல கோவில்கள் சட்டவிரோதமானவை என கூறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய சமூக உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்க்க அரசு சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என டத்தோ டாக்டர் லோகபாலா வலியுறுத்தினார். “இந்த மாதிரியான சமூக உணர்வுகளை பாதிக்கும் சம்பவங்களை எதிர்கொள்வதற்காக ஒற்றுமை சட்டம் அவசியமாகின்றது,” என்று பிபிபியின் மத்திய செயலவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் டத்தோ லோகபாலா தெரிவித்தார்.
மேலும் பினாங்கு மாநிலத்தில் வீடுகளை வாங்கும் இந்திய முஸ்லிம் மக்களுக்கு 5% கழிவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை வரவேற்கின்றோம் எனவும், இதேசமயம் அந்த சலுகை பி40 வர்க்கத்தினருக்கான அனைத்து இனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
“வசதிக்குறைவான அனைத்து மக்களும் அரசு உதவியால் உயரும் நிலைக்கு வர வேண்டும்,” என்று அவர் கூறினார்.
தற்போது பரபரப்பாகும் கைத்தொலைபேசி தரவுகள் சேகரிப்பு குறித்து, அது தனிநபர் பாதுகாப்பு தரவு சட்டம் 2010 (Act 709)-க்கு முரண்படுவதாகவும், இந்த விவகாரத்தில் MCMC நேர்மையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமூக ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் அரசாங்கம் சட்ட ரீதியாக சீரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையே பிபிபி தலைவர் வலியுறுத்துகிறார். மதமரியாதை, சமூக நலன் மற்றும் தனிநபர் உரிமைகள் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அவரது முக்கியக் கோரிக்கையாகும்.





