என் தமிழ்

மகளிர் முன்னேற்றத்திற்கு உறுதிமொழி: கோலா லாங்கட் ம.இ.கா மகளிர் அணியின் 31-ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்

கோலா லாங்கட், 15/06/2025 : கோலா லாங்கட் ம.இ.கா மகளிர் அணியின் 31-ஆம் ஆண்டு பொதுக்கூட்டம், கோல லாங்கட் கிளை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பொதுக்கூட்டத்தை ம.இ.கா மத்தியக் குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமான திரு ஸ்ரீதரன் ரெங்கநாதன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், ம.இ.கா மத்தியக் குழு உறுப்பினர் திருமதி விக்னேஸ்வரி பாபுஜி, சிலாங்கூர் மாநில ம.இ.கா மகளிர் அணிப் பொருளாளர் திருமதி மகேஸ்வரி, ம.இ.கா கோலா லாங்கட் கிளை துணைத் தலைவர் திரு பரமசிவம், கிளை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைகளின் மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய திரு ஸ்ரீதரன், கோலா லாங்கட் மகளிர் அணித் தலைவர் திருமதி ரேனுகா தேவி மற்றும் அவரது குழுவினருக்கு, பெண்கள் முன்னேற்றத்துக்காக இடையறாத திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை முன்னெடுத்ததற்காக, தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

“பெண்கள் சமூகத்தின் தூண்கள். அவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் அரசியல் பங்கேற்புக்கு வாய்ப்பளிப்பது நம் கடமையாகும். ம.இ.கா மகளிர் அணியின் இப்பணியாற்றும் உறுதி பாராட்டப்பட வேண்டியது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மாநாடு முழுவதும் உற்சாகமும், உறுதியும் வெளிப்பட்டதாகக் காணப்பட்டது. “பெண்களின் உரிமை மற்றும் வலிமை வாழ்வின் அனைத்து தளங்களிலும் வலியுறுத்தப்பட வேண்டியது இன்று காலத்தின் தேவை,” என ஸ்ரீதரன் அவர்கள் வலியுறுத்தினார்.

Scroll to Top