என் தமிழ்

தெற்காசிய பதட்டங்களை வெளியுறவு அமைச்சகம் கண்காணித்து, மலேசியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது.

புத்ராஜெயா, 13/05/2025 : எல்லைப் பதட்டங்கள் மற்றும் பிராந்தியத்தில் விமான நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, தெற்காசியப் பிராந்தியத்தின் நிலைமையை, குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு குறித்து, வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

சமீபத்திய முன்னேற்றங்களைப் பெறுவதற்காக புது தில்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் மலேசிய துணைத் தூதரக அலுவலகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மலேசியர்களுக்கும் தகுந்த உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“மலேசிய இராஜதந்திர தூதரகங்கள் இரு நாடுகளிலும் உள்ள மலேசியர்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை சேவைகள் மற்றும் தூதரக உதவிகளை வழங்கியுள்ளன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த இடையூறு மேற்கு மற்றும் வட இந்தியாவில் குறைந்தது 32 விமான நிலையங்களையும், இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சி உள்ளிட்ட பாகிஸ்தானின் பல முக்கிய விமான நிலையங்களையும் பாதித்தது.

இந்தியாவில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரிபவர்கள் உட்பட, புது தில்லியில் உள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் மும்பை மற்றும் சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகங்கள் மூலம் 350க்கும் மேற்பட்ட மலேசியர்கள் உதவி பெறுகின்றனர்.

இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள 100க்கும் மேற்பட்ட மலேசியர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கராச்சியில் உள்ள துணைத் தூதரகத்திலிருந்து தங்குமிடம், நலன்புரி மற்றும் நாடு திரும்புவதற்கான பயண ஏற்பாடுகள் உள்ளிட்ட உதவிகளைப் பெற்றுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் வீடு திரும்பியதாகவோ அல்லது விரைவில் புறப்பட திட்டமிடப்பட்டதாகவோ கூறப்படுகிறது.

“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மலேசியர்கள், குறிப்பாக எல்லைப் பகுதிகளில், அருகிலுள்ள மலேசிய இராஜதந்திர பிரதிநிதித்துவத்தில் தங்கள் இருப்பைப் பதிவு செய்து, அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Scroll to Top