காஜாங் வட்டார பேரவையின் 18ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா 10-8-2014 அன்று காலை 9.00 மணிக்கு காஜாங் தமிழ் பள்ளியில் நடைபெற்றது. கடந்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்திலேயே சிறந்த வட்டாரப் பேரவையாக காஜாங் தேர்வு பெற்று 2000ரிங்கிட் பரிசைப் பெற்றதோடு 5 அம்ச திட்டத்தின் செயற்பாடுகளில் 3 பிரிவுகளில் வெற்றி பெற்றது.
நிகழ்ச்சியில் ம.இ.ச. காஜாங் வட்டாரப் பேரவையின் தலைவர் தொக்கோ குரு திரு. ப. சுப்ரமணியம், ம.இ.ச சிலாங்கூர் மாநிலப் பேரவையின் தலைவர் உயர்திரு கணேஷ் பாபு, ஜாலான் ரெக்கோ ஸ்ரீ சுரமணியர் ஆலயத்தின் தலைவர் உயர்திரு டத்தோ கா. கிருபாகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை டத்தோ கா.கிருபாகரன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
சமயம், ஆலய விவகாரங்கள், கல்வி மற்றும் சமூகச் சேவைகள் ஆகிய நான்கு முக்கியப் பிரிவுகளிலும் மலேசிய இந்து சங்கம் கஜாங் வட்டாரப் பேரவை தனது சேவையை செவ்வனே செய்து வருவதாக திரு. ப. சுரமணியம் தனது தலைமையுரையில் கூறினார். மேலும் ஆண்டு தோறும் சமயக் குரவர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர். சுந்தர மூர்த்தி நாயனார் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோருக்கு விழா எடுத்து வருவதையும் சுட்டிக் காட்டினார். இல்லங்களில் மாதந்தோறும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்துவது, சமயச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தல் முதலான பணிகளை செய்வதையும் குறிப்பிட்டார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க கருத்தரங்குகள் நடத்துவது பயிற்சி நூல்கள் வழங்கி உதவுவதையும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ஆ. சுப்ரமணியம் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.