சுபாங், 30/03/2025 : 50 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட ஸ்மார்ட் எனப்படும் மலேசிய தேடல் மற்றும் மீட்பு சிறப்பு குழு, இன்று காலை மியன்மாருக்குப் புறப்பட்டது.
மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும், மனிதாபிமானப் பணிகளுக்காகவும் அரச மலேசிய விமானப்படையின் A400M ரகத்திலான இரு விமானங்கள் மூலம் அக்குழு பயணித்தது.
லாரி, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உட்பட 10 டன் பொருள்களுடன், அரச மலேசிய விமானப்படையின் விமானத் தளத்திலிருந்து இந்த விமானம் புறப்பட்டது.
தீயணைப்பு பிரிவின் மூத்த கண்காணிப்பாளர் முஹமட் அஃபிசுல் அப்துல் ஹலிம் தலைமை தாங்கும்
இக்குழுவில், மலேசிய இராணுவப் படையைச் சேர்ந்த 16 உறுப்பினர்களும் அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த 13 பேரும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த 21 உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
தேவைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து, ஏழு முதல் 14 நாள்கள் வரை அக்குழு மீட்புப் பணியில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
“ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான நட்பு, ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்குப் பிரதமர் தலைவராக பொறுப்பேற்றிருப்பது, 2025 ஆசியான் தலைவராக மலேசியாவின் பங்கு மற்றும் மனிதாபிமானம் மற்றும் விசுவாச உணர்வின் காரணமாக, மியன்மாரில் நிகழ்ந்துள்ள அசம்பாவிதத்திற்கு நாங்கள் மிகவும் அனுதாபம் கொண்டுள்ளோம், எனவே ஸ்மார்ட் குழுவை ஏற்பாடு செய்வதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்”, என்று அவர் கூறினார்.
இன்று ஸ்மார்ட் குழுவை வழி அனுப்பும் நிகழ்ச்சியில் டாக்டர் அஹ்மாட் சாஹிட் அவ்வாறு கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை, ரிக்டர் அளவை கருவியில் 7.7-ஆகப் பதிவான நிலநடுக்கம் மியன்மாரை உலுக்கியது.
இந்த வலுவான நிலநடுக்கத்தினால் பலியானோரின் எண்ணிக்கை 2000-ஐ எட்டியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
Source : Bernama
#MyanmarEarthquake
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews