முழு விடுதி பள்ளி மாணவர்கள் STEM-ஐ தேர்வு செய்வதை வலியுறுத்தும் முயற்சி அவசியமானது

முழு விடுதி பள்ளி மாணவர்கள் STEM-ஐ தேர்வு செய்வதை வலியுறுத்தும் முயற்சி அவசியமானது

ஆராவ், 14/03/2025 : தொழில்துறையின் தேவையைப் பூர்த்தி செய்ய, 60,000 பொறியியலாளர்கள் தேவை என்ற இலக்கை அடைவதற்கு, நாட்டில் உள்ள முழு விடுதி பள்ளிகளின் 70 விழுக்காடு மாணவர்கள், STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறையைத் தேர்வு செய்வதை வலியுறுத்தும் முயற்சி, மிகவும் அவசியம்.

சம்பந்தப்பட்ட துறைகளில் மாணவர்கள் கவனம் செலுத்தி சிறந்த தேர்ச்சி பெற்றால், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் தங்களது கல்வியைத் தொடர வாய்ப்பாக அமையும் என்று, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

”இந்த 70 விழுக்காடு STEM-இல் கவனம் செலுத்த வேண்டும் என்று அனைத்து முழு விடுதி பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது MTUN பல்கலைக்கழகங்களுக்கு ஒரு விநியோகத்தை வழங்கும். இதனால், STEM துறையில் நல்ல முடிவுகளைப் பெற்ற மாணவர்களை நேரடியாக MTUN பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப முடியும்,” என்று அவர் கூறினார்.

இன்று, பெர்லிஸ், ஆராவ்வில் UniMAP பல்கலைக்கழகத்திற்கு அலுவல் பயணம் மேற்கொண்டபோது, செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் அஹ்மட் சாஹிட் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அடுத்த ஆண்டு தொடங்கி நாட்டில் உள்ள முழு விடுதி பள்ளிகளின் 70 விழுக்காடு மாணவர்கள் STEM துறையைத் தேர்வு செய்து தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த புதன்கிழமை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரைத்திருந்தார்.

நாட்டில் மேம்பாட்டில், STEM துறையின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப இவ்வாண்டு மாணவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டிருந்தார்.

Source : Bernama

#STEM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews