கோலாலம்பூர், 24/02/2025 : 18 உள்ளூர் ஊடக நிறுவனங்களின் டிக் டோக் கணக்குகள் அண்மையில் முடக்கப்பட்டது தொடர்பில் விளக்கம் பெற, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி, டிக் டோக் உடன் தொடர்பு கொண்டு வருகிறது.
பத்தாங் காலியில் உள்ள பள்ளிவாசலில் ஒரு சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலான புகாருக்குப் பின்னர் அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டது தொடக்கக்கட்ட தகவல்களின் வழி தெரிய வந்துள்ளதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
“டிக் டோக்-இன் ஏ.ஐ தான் தற்போது பிரச்சனையே. இங்கே ஒரு சிறிய எச்சரிக்கை, ஏ.ஐ சில சமயங்களில் இலக்கிடப்பட்டதற்கும் மேல் செயல்படலாம். அதன் ஊடக தளங்கள் அல்லது ஊடக நிறுவனங்கள் ஒரே மாதிரியானவை அல்ல என்பது புரிந்து கொள்ளவில்லை. மேலும், அதன் அறிக்கை சாதாரண மக்கள் உருவாக்கும் உள்ளடக்கத்திலிருந்து வேறுபட்டவை. எனவே இது தொடர்பில் விரைவில் ஒரு கலந்துரையாடலை நடத்துமாறு நான் கேட்டுக் கொண்டுள்ளேன்,” என்றார் அவர்.
இன்று மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமா ஏற்பாட்டிலான ‘AI in the Newsroom’ பயிற்சி திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டபோது ஃபஹ்மி ஃபட்சில் அவ்வாறு கூறினார்.
மேலும், இப்பிரச்சனை மீண்டும் எற்படாமல் இருக்க ஊடக நிறுவனங்களுக்குச் சொந்தமான கணக்குகளின் செயல்பாட்டை தமது தரப்பும், டிக்டாக் நிர்வகிப்பு நிறுவனமும் ஆராயவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக நேற்று பெர்னாமாவுக்குச் சொந்தமான கணக்குகள் உட்பட ஊடக நிறுவனங்களுக்குச் சொந்தமான 18 டிக் டோக் கணக்குகள் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டன.
இதனிடையே, ஊடக நிறுவனங்கள் தங்களின் செயல்பாட்டிற்கு செயற்கை நுண்ணறிவு உருமாற்று திட்டத்தை ஏற்படுத்த பரிந்துரைக்கப்படுவதாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட திட்டம் நடப்பில் உள்ள ஊழியர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தாத உறுதிசெய்ய அப்புதிய தொழில்நுட்பம் வழியான முதலீடுகள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.