கோலாலம்பூர், 22/01/2025 : அந்நியத் தொழிலாளர்களை நம்பியே நாட்டில் உணவகத் துறை அண்மைய காலமாக இயங்கி வருகிறது.
ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி அரசாங்கம் உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் தருவிப்பு நடவடிக்கையை முற்றாக நிறுத்திவிட்டது.
இதனால் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பற்றாக்குறையுடன் உணவகத்துறை மிகப் பெரிய பாதிப்புகளையும் சவால்களையும் எதிர்நோக்கி வருவதாக, மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம் பிரெஸ்மாவும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் பிரிம்மாஸும் இணைந்து தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தின.
தொழிலாளர் பற்றாக்குறை குறித்து மனிதவளத் துறையிலிருந்து பிரதமர் துறை வரை பல்வேறு மனுக்களை உணவக சங்கங்கள் கடந்தாண்டு வழங்கி இருந்தும் இன்னும் அதற்கு எவ்வித சுமூக தீர்வையும் அரசாங்கம் அறிவிக்கவில்லை.
இவ்வாண்டிலாவது அதற்கான உரிய தீர்வை நடப்பு அரசாங்கம் வழங்கும் என்ற நம்பிக்கையில், உணவக உரிமையாளர்களின் முதன்மையான மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கப் போவதாக பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி கூறினார்.
அவற்றில், முதல் கோரிக்கையாக மாற்று தொழிலாளர்கள் கொள்கை முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முனைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
“இந்திய உணவகங்கள் மற்றும் இந்திய முஸ்லிம் உணவகங்களில் வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்கு பதில் மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியது. குறிப்பாக பத்து வெளிநாட்டு தொழிலாளர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்கு பதில் பத்து பேரை புதிதாக வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் வாய்ப்பு வழங்கியது. இதன் மூலம் உணவக உரிமையாளர்களா எவ்வித தங்கு தடையின்றி வியாபாரம் செய்து வந்தனர். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக மாற்றுத் தொழிலாளர்கள் கிடைக்காததால் உணவக உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 25 லட்சத்திற்கும் மேலாக அதிகரிக்கக் கூடாது என்பது அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தாலும், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த இந்திய மற்றும் இந்திய முஸ்லிம் உணவகங்களுக்குமாக சேர்த்து தமது தரப்பு 25,000 பணியாளர்களை மட்டுமே விண்ணப்பிப்பதாக அவர் கூறினார்.
அதையும் மீறி போதுமான பணியாளர்கள் இல்லாவிடில், கோவிட் 19 பெருந்தொற்றுக்கு பிந்தைய காலகட்டத்தை போல உணவகங்களை மூடுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்று அவர் தமது ஆதங்கத்தை தெரிவித்தார்.
அதேபோன்று அந்நியத் தொழிலாளர்களுக்கான 18-லிருந்து 45 வயது வரம்பை, 18-லிருந்து 60ஆக உயர்த்துமாறு அரசாங்கத்திடம் மற்றொரு பரிந்துரை முன் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“பெரும்பாலும் குறிப்பிட்ட வயதில் வேலைக்கு வரும் அந்நியத் தொழிலாளர்கள் குறிப்பாக சமையல்காரர், பிரட்டல் வகை உணவுகளைத் தயாரிப்பவர்கள், ரொட்டி சானாய் போடுபவர்கள் ஆகியோர் 40 வயதிற்கு மேல் அத்துறையில் பக்குவடைமவதோடு அதில் புலமை பெறவும் செய்கின்றனர். இந்நிலையில் வேலையை நன்றாகக் கற்றுக் கொண்ட பின்னர் அவர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு பின்னர் புதிய வேலையாட்களை தருவித்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பது மிகவும் சிரமமாக உள்ளது,” என்று டத்தோ ஹாஜி ஜவஹர் அலி தெரிவித்தார்.
மேலும், அந்நியத் தொழிலாளர்களுக்கான இரட்டிப்பு லெவி கட்டண நடைமுறையையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
குறிப்பாக அந்நியத் தொழிலாளர் தருவிப்பு பிரச்சனைக்கு உகந்த தீர்வு காணும் வரை இந்த லெவி கட்டணமுறை ஒத்தி வைக்கப்பட்டால் உணவக உரிமையாளர்கள் பெரும் பயனடைவார்கள் என்று பிரிம்மாஸ் தலைவர் டத்தோ ஜே.கோவிந்தசாமி தெரிவித்தார்.
எனவே, உணவகத்துறைக்கு புதிதாக ஒதுக்கீட்டு முறை தேவையில்லை என்றும் இருக்கின்ற தொழிலாளார் ஒதுக்கீட்டை நிலை நிறுத்தினாலே போதுமானது என்றும் கோவிந்தசாமி கூறினார்.
இன்று, அவ்விரு உணவக சங்கங்களும் இணைந்து, கோலாலம்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் அக்கருத்தினை தெரிவித்தனர்.
Source : Bernama
#RestaurantEmployees
#ForeignEmployees
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.