கூட்டரசு பிரதேசத்தில் தூய்மை சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

கூட்டரசு பிரதேசத்தில் தூய்மை சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

ஜாலான் புக்கிட் பிந்தாங், 19/01/2025 : கூட்டரசு பிரதேசத்தில் தூய்மை மற்றும் உற்சாகத்தை நோக்கிய திட்டங்களை ஏற்பாடு செய்ய ஆர்வமுள்ள எந்தவொரு அரசு சார்பற்ற அமைப்போ அல்லது சங்கத்திற்கோ அரசாங்கம் ஒதுக்கீடுகளை வழங்கும்.

தினசரி வாழ்வில் மக்கள் தொடர்ந்து தூய்மையான சூழலைப் பழக்கப்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதில், மேலும் அதிகமான தரப்பினரை ஊக்குவிக்கும் முயற்சி இதுவாகும் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.

”கூட்டரசு பிரதேச நிலையில் எங்களிடம் ஒதுக்கீடுகள் உள்ளன. எனவே, நான் சொன்னது போல தொடக்கத்தில் மட்டுமே இருக்கும் அம்சமாக இருக்கக்கூடாது. மாறாக, சமூக அளவிலும் எங்களுடன் ஒத்துழைக்க அரசு சார்பற்ற அமைப்புகள் ஆர்வமாக இருந்தால் நாங்கள் இதைச் செய்ய விரும்புகிறோம். நாங்கள் ஒரு வியூக பங்காளியாக அவர்களை சமூக அளவில் செயல்படுத்த ஊக்குவிப்பதற்காக வரவு செலவு தயார் செய்துள்ளோம், ” என்றார் அவர்.

கூட்டரசு பிரதேச அமைச்சு தரப்பிடம் சமர்பிக்கப்பட்ட செயல் திட்டத்திற்கான விண்ணப்பத்தைப் பொறுத்து ஒதுக்கீட்டின் தொகை இருக்கும் என்று டாக்டர் சலிஹா முஸ்தாபா விளக்கினார்.

இன்று, கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய மூன்று கூட்டரசு பிரதேசங்களுக்கான BeST எனப்படும் ‘எங்கும் தூய்மை’ திட்டத்தை ஒரே நேரத்தில் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

தூய்மையான மற்றும் நிலையான நகரமாக கூட்டரசு பிரதேசத்தை உருவாக்குவதற்கான முயற்சிக்கு ஏற்ப BeST திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு ஆசியானிற்குத் தலைமை ஏற்றிருப்பது மற்றும் 2026ஆம் ஆண்டு மலேசியாவை சுற்றிப் பார்க்கும் ஆண்டு பிரச்சாரம் ஆகியவற்று இது நாட்டிற்கு நற்பெயரை ஏற்படுத்தி தரும் வகையில் அமைகின்றது.

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia