கோலாலம்பூர், 17/01/2025 : சமூக ஊடகத்தள நடத்துனரான மேத்தா, மலேசியாவில் தொடர்ந்து செயல்பட, சேவை வழங்குநர் பிரிவு ஏஎஸ்பி உரிமத்தைப் பெறுவதற்கான இறுதிக் கட்டத்தில் உள்ளது.
உரிமம் வழங்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக சிறப்பு சட்டத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆவணங்களை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமை வழிநடத்தும் அந்தத் தலைமை நிறுவனம் தயாரித்து வருவதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
“மேத்தா சில ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதிக் கட்டத்தில் உள்ளது,” என்றார் அவர்.
இன்று மலேசியாவில் சமூக ஊடக உரிமம் தொடர்பாக ஆர்டிஎம் தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது ஃபஹ்மி ஃபட்சில் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கூகள் மற்றும் எக்ஸ் போன்ற இதர சமூக ஊடக தளங்களின் வழங்குநர்கள் தங்களது நிலையை உறுதி செய்வதற்கு மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தமது தரப்பு ஒரு சமூக ஊடக தளம் அல்ல என்று கூகள் கூறினாலும் அதன் கீழ் உள்ள யூடியூப்பின் சில பகுதிகள், குறிப்பாக யூடியூப் ஷார்ட்ஸ் போன்றவை டிக்டாக்கை போலவே செயல்படுகின்றன.
ஆகவே கூகள் நிறுவனமும் உரிமம் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமைச்சு உறுதியாக உள்ளதாக அவர் கூறினார்.
“X வலைத்தளம் 80 லட்சத்திற்கும் குறைவான பயனர்களைக் கொண்டிருப்பதாகக் கூறினாலும், தற்போது அவற்றில் சிலவற்றை நாங்கள் மதிப்பீடு செய்து வருகிறோம். இதில் அனைத்து ஊடகத் தளங்களும் இணைக்கின்றனவா என்பதை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம்,” என்றார் அவர்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் லிங்கிட்டின் தளத்திற்கான மலேசிய பயனர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை எட்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதால் அதனை நிர்வகிக்கும் மைக்ரோசொஃப்ட் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தைகள் மேற்கொண்டு வருவதாக ஃபஹ்மி கூறினார்.
Source : Bernama
#Meta
#FahmiFadzil
#License
#SocialMediaLicense
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.