ஈப்போ, 14/01/2025 : ஈப்போ கல்லுமலை அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
உழவர் திருநாளான இந்நன்னாளில், நாட்டிலுள்ள விவசாயத்துறை தொடர்ந்து செழிப்புடன் திகழ வேண்டி ஆலயத்தில் ஆண்டுதோறும் பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெறுவதாக ஈப்போ, இந்து தேவஸ்தான பரிபாலன சபா தலைவர் ஆர்.சீதாராமன் கூறினார்.
”இந்தியாவைப் போன்று இங்குள்ள இந்தியர்களும் கோலாகலமாக முறையில் பொங்கல் வைப்பதைப் பார்க்கையில் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. மரபு காக்கப்பட்டால் மட்டுமே இனத்தின் மாண்பு ஓங்கி நிற்கும்,” என்று சீதாராமன் தெரிவித்தார்.
காலையில் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர் பொங்கல் வைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, நாளை மற்றும் அதற்கு மறுநாள் மாட்டுப் பொங்கலும் காணும் பொங்கலும் ஆலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இல்லங்களில் பொங்கல் வைப்பதற்கு முன்னதாக, காலை மணி 7.30 மணியளவில் சுற்றுவட்டாரத்திலுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆலயத்தில் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நண்பகல் வரையில் ஆலயத்தில் வழிபாடுகள் தொடர்ந்தன.
பினாங்கு
பினாங்கு மாநிலத்திலும், இல்லங்கள் மற்றும் ஆலயங்களில், பண்பாடும் பாரம்பரியமும் மாறாது பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதில் ஒன்றாக, பினாங்கில் உள்ள பாயான் பாருவிலுள்ள ஶ்ரீ விஸ்வநாதர் ஶ்ரீ விசாலாட்சி ஆலயத்தில் இத்திருநாள் மக்களுடன் சேர்ந்து கொண்டாடப்பட்டது.
மலேசியாவில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தாலும், இந்தியாவிலுள்ள விவசாயிகள் இந்நாளை திருவிழா போன்று கோலாகலமாக கொண்டி மகிழ்வதாக ஆலயத்தைச் சேர்ந்த இராஜேந்திர பிரசாத் ஆறுமுகம் தெரிவித்தார்.
அந்த ஆலயத்தில், இன்று காலையில் இரண்டு பானைகளில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையல் வைக்கப்பட்டது.
ஜோகூர்
அதேவேளையில், இன்று வேலை நாளாக இருந்தாலும் ஜோகூர் மாநிலத்திலுள்ள சில மாவட்டங்களில் பொங்கல் திருநாள் மிதமான அளவில் கொண்டாடி மகிழப்பட்டது.
ஜோகூர் பாருவிலுள்ள, ஶ்ரீ மஹா சிவ முனீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டது பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் காண முடிந்தது.
அந்த ஆலயத்தில், அரிசி, பால், சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்டு மண்பானையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து இவ்விழா கொண்டாடப்பட்டது.
Source : Bernama
#Pongal
#PongalInMalaysia
#Penang
#Johor
#Perak
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.