வணக்கம் மடானியின் ஏற்பாட்டில் களைக்கட்டிய பொங்கல் கொண்டாட்டம்

வணக்கம் மடானியின் ஏற்பாட்டில் களைக்கட்டிய பொங்கல் கொண்டாட்டம்

சுங்கை பூலோ, 14/01/2025 :  உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும், உழவர் திருநாள் இன்று.

கால்நடை முதல் இயற்கை வரை வேளாண்மைக்கு உதவும் அனைத்திற்கும் நன்றி பாராட்டி, அன்பைப் பகிர்ந்து கொள்ளும் நன்நாளாகவும் இத்திருநாள் அமைகின்றது.

தைமகளை வரவேற்கும் வகையில், சிலாங்கூர், சுங்கை பூலோவில் உள்ள தேவி ஶ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தில் வணக்கம் மடானியின் ஏற்பாட்டிலான பொங்கல் நிகழ்ச்சி, இன்று நடைபெற்றது.

அறுவடையின் முதல் விளைச்சலான புத்தரிசியை, வெல்லம், பால், நெய்யுடன் சேர்த்துப் புதுப் பானையில் பொங்கலிட்டு, சூரியனுக்குப் படைத்து, அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்வதே பொங்கலின் மாண்பாகும்.

அதன் அடிப்படையிலேயே, ஶ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தில் தை முதல் நாளை மகிழ்ச்சியோடு வரவேற்க, பக்தர்கள் காலை 8.30 மணிக்கே ஆலயங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.

ஆலயத்தின் முன்புற வாசலில் சந்தனமும் குங்குமமும் குழைத்து, பொட்டு வைக்கப்பட்டிருந்த மாவிலைகள், ஆலய வளாகத்தைத் சுற்றி கட்டப்பட்டிருந்த மஞ்சள் கொத்துகள் மற்றும் நேர்த்தியாக பின்னப்பட்ட தோரணங்கள் போன்றவையுடன் ஶ்ரீ மகா கருமாரியம்மன் ஆலய விழாக் கோலத்துடன் அழகாகக் காணப்பட்டது.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சி, ஆலயத்தின் சிறப்பு பூஜைக்குப் பின்னர், காலை சுமார் 9.30 மணிக்குத் தொடக்கம் கண்டது.

ஆண்டுதோறும், ஆலயத்தில் சூரியப் பொங்கல் வைத்து வழிபட்ட பின்னரே, வீடுகளில் குடும்பத்துடன் பொங்கலிட்டு பூஜையிடுவதாக, சிலர் பெர்னாமாவிடம் கூறினார்.

”சூரியப் பொங்கலை கோவிலில் வைத்து விடுவோம். அதன் பிறகு நான் வீட்டிற்குச் சென்று பொங்கல் வைத்து வழிபாடு எல்லாம் முடித்து விட்டு, மகளின் வீட்டிற்குச் செல்வோம். அங்கு அவருக்கு பொங்கல் வைப்பதற்கான உதவிகளைச் செய்வோம். அதோடு, வகை வகையான உணவுகளைச் சமைத்து உணவு கொடுப்போம்”, என்று அம்மணி நாகப்பன் கூறினார்.

”எல்லா பேரப்பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளை வைத்து வீட்டின் முன்புறத்தில் பொங்கல் வைப்போம். எங்களின் வீட்டில் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக தான் இருக்கும். ஆனால், இம்முறை டத்தோ ஶ்ரீ ரமணனின் அழைப்பை ஏற்று கோவிலுக்கு வந்து நாங்கள் பொங்கல் வைக்கின்றோம்”, என்றார் இந்திராகாந்தி பெருமாள்.

இதனிடையே, ஆலயத்தில் பொங்கல் வைப்பது இதுவே முதல்முறை என்பதால் மகிழ்ச்சியுடன் சேர்த்து புதிய அனுபவத்தையும் பெற முடிந்ததாக, ஹம்சவாணி சுகுமாறன் கூறினார்.

”பொங்கல் வைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வீட்டில், கரும்பு, பொங்கல் பானை, பொங்கலுக்கு உண்டான அரிசி மற்றும் பால் போன்றவைகளை நாங்கள் வாங்கி விடுவோம். இதுதான் முதல்முறை நான் பொங்கல் வைத்திருப்பது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால், எனக்கு பொங்கல் வைக்க தெரியாது. இதுதான் முதல்முறை”, என்று அவர் கூறினார்.

மேலும், 10 மண்பானைகளில் பொங்கல் வைத்தது மட்டுமின்றி கோலம் போடுதல், பூத்தொடுத்தல் போன்ற போட்டிகளும் நடைபெற்றன.

இவ்விழாவில், பண்பாடும் பாரம்பரியமும் மாறாத கலாச்சார உடையினில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Source : Bernama

#Pongal
#PongalInMalaysia
#MalaysiaMadani
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.