சிப்பாங், 03 /01/2025 : இந்தியா, கேரளாவில் அமைந்துள்ள சபரிமலைக்கு யாத்திரையைத் தொடரும் மலேசியாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், உள்ளூர் விமான நிலையங்களில் சில சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
அதற்கு தீர்வு காணும் நோக்கில், விமான நிலையத்தில் ஐயப்ப பக்தர்களுக்குச் சிறப்பு வழித்தடத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்று மலேசிய ஐயப்ப பக்தர்கள் சேவை சங்கம் முன்வைத்த கோரிக்கையை, போக்குவரத்து அமைச்சு, இன்று நிறைவேற்றியது.
ஆண்டுதோறும் மலேசியாவிலிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர்.
அதில், பெரும்பாலானோர் முதியவர்களாக இருப்பதால், அவர்களின் பயணம் பாதுகாப்பானதாக அமைய கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தாம் போக்குவரத்து அமைச்சின் பார்வைக்குக் கொண்டு சென்றதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.
”இந்த ஏற்பாட்டை நாங்கள் அரசாங்கத்திடம் முன்மொழிந்தோம். விமான நிலையத்தில் பிரத்தியேக முகப்பிடம் மற்றும் அவர்களுக்கான வழித்தடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தால் வரிசையில் நின்று செல்ல தேவையிருக்காது. ஆக, அதற்கு தான் இன்று காலை இங்கு வந்து பார்த்தோம். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. 150 பக்தர்கள் அடங்கிய முதல் குழு இன்று அவர்களின் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்”, என்று அவர் கூறினார்.
மேலும், ஐயப்ப பக்தர்களுக்கென பிரத்தியேகமாக திறக்கப்பட்டுள்ள சிறப்பு காத்திருப்பு இடம் மற்றும் முகப்பிடங்கள், இன்று தொடங்கி அடுத்த இரண்டு வாரங்களுக்கு KLIA 1 மற்றும் KLIA 2 ஆகிய இரண்டு விமான நிலையங்களில் அமைக்கப்பட்டிருப்பதாக, நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் ஜம்பூநாதன் தெரிவித்தார்.
”அவர்களுடைய இந்த பயணத்தை சுலபப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இன்றைக்கு சிறப்பு வழித்தடம் தெர்மினல் ஒன்று மற்றும் தெர்மினல் இரண்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் இணைந்து MAHB, மலிண்டோ, ஏர் ஆசியா மற்றும் மாஸ் ஏர்லைன்ஸ் இவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றார்கள். இரண்டு வாரங்களுக்கு அவர்களுக்கான இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”, என்றார் அவர்.
இந்தியாவிற்குச் செல்லும் இதர பயணிகளோடு சேர்ந்து பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைச் செவிமடுத்து, உடனடியாக அதற்கான தீர்வை வழங்கிய தரப்பினர்களுக்கு மலேசிய ஐயப்ப பக்தர்கள் சேவை சங்கத்தின் தலைவர் யுவராஜா குப்புசாமி நன்றி தெரிவித்து கொண்டார்.
”மலேசியாவிலிருந்து செல்லும் பக்தர்கள் விமான நிலையத்தில் தாமதமாகுவது, சபரிமலையில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என அனைத்தும் இருந்தாலும், இன்றைக்கு மலேசியாவில் விரைவாக தீர்வு கண்டுள்ளனர். இந்த குழுவில் ஈடுபட்ட அனைவருக்கும் மலேசிய ஐயப்ப பக்தர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்”, என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு வழித்தடங்களும் முகப்பிடங்களும் தங்களுக்குப் பல்வேறு நிலையில் பயன் தருவதாக, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் சிலர் கூறினர்.
”எதிர்காலத்தில் வரக்கூடிய சாமிமார்களுக்கு, சபரிமலைக்குச் செல்லும் வழிமுறைகள், அனைவரும் விரத்தமிருந்து களைத்து வருவர், அந்நிலையில் விமான நிலையத்திற்கு வந்து இன்னும் களைத்துதான் செல்வர். ஆக, அந்த பாரத்தைக் குறைத்து அவர்களை நல்ல முறையில் வழிநடத்துவதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”, என்று கூறினார் செல்வராஜூ கோபால்.
”வந்தோம். எங்களுக்காக மூன்று முகப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. சுவாமிமார்கள் அவர்களின் வேளைகளை முடித்தனர். குடிநுழைவுத் துறைக்கான சோதனைகள் மேற்கொண்டு விமானம் ஏறுவதற்கான ஒரு சுலபமான வழியை அமைத்துக் கொடுத்துள்ளனர்”, என்று தமிழ்செல்வன் முனுசாமி தெரிவித்தார்.
இன்று, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் காலை 9.30 மணிக்கு, 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலை நோக்கிய தங்களின் பயணத்தைப் பாதுக்காப்பாக தொடங்கினர்.
News Source : Bernama
Photos Source : Malaysia Ayyappa Seva Sangam
#MalaysiaAyyappaSevaSangam
#AyyappaDevotees
#KLIA1
#KLIA2
#AyyappaDevoteesSpecialArrangements
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia