பினாங்கு, 25/09/2024 : பினாங்கு மாநில இந்திய திரைப்படச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருகின்ற 27/09/2024, வெள்ளிக்கிழமை மாலை மணி 05.00 முதல் இரவு மணி 11.00 வரை கோம்டார் பினாங்கில் உள்ள A அரங்கில், இந்தியர் நடனத் திருவிழா 2024 வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.
இந்த இந்தியர் நடனத் திருவிழாவில், இந்தியர்களின் பல வகையான பாரம்பரிய நடனங்கள் இடம்பெறுகின்றன. மலேசிய சுற்றுலாத்துறையின் ஆதரவில் இந்த நடனத் திருவிழா நடைபெறுகிறது. பினாங்கு மாநில கலைஞர்களை மையமாக கொண்டு பிற மாநில கலைஞர்களும் கலந்து கொள்ளும் இந்த நடனத் திருவிழாவில் பரதம், குச்சுபுடி, கரகாட்டம், மயிலாட்டம், பங்கரா போன்ற இந்திய நடனங்களை பல கலைஞர்கல் மேடையில் ஆடுவர். இந்த இந்திய நடனக் கலை குறித்து விளக்கங்களும் நிகழ்ச்சியின் இடையே வழங்கப்படும் என்பது இந்த நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பாக அமையும். இந்திய பாரம்பரிய நடனக் கலைகள் காலப் போக்கில் மறைந்துவிடாமல் இருக்கவும் அவற்றை மீண்டும் தழைக்கச் செய்யும் ஒரு முயற்சியாகவும் இந்த நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவுக்கு, பினாங்கு அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு மேதகு சுந்தரராஜூ அவர்களும் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபரும் நன்கொடை நெஞ்சருமாகிய திரு.சின்னையா நாயுடு மற்றும் திருமதி.ஜோபினா நாயுடு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகவும், மேலும் பல பெருந்தகையினரும் கலந்து கொள்கின்றனர். மேலும், இந்த இந்தியர் நடனத் திருவிழா நிகழ்ச்சி ஓர் இலவச நிகழ்வாக நடைபெறுவதால், பொது மக்கள் இந்த விழாவில் திரளாக கலந்து கொண்டு பேரதரவு தரும்படி ஏற்பாட்டுக் குழுவினர் சார்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இல.விக்னேஷ்பிரபு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
#IndianDanceFestival2024