காலாவதியான மருந்து அதன் செயல்திறனை இழந்திருக்கலாம் மற்றும் பயன்படுத்தினால் ஆபத்தாக முடியும் என்று மலாயா பல்கலைக்கழக கிளினிக்கின் இயக்குனர் டாக்டர் ஷுரைடா முகாமட் கூறினார்.
“உதாரணமாக, காலாவதியான ஆண்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு சிகிச்சை தோல்வியை ஏற்படுத்தும் மற்றும் ஆண்டிபயாடிக்-எதிர்ப்பு பாக்டீரியாவின் வளர்ச்சியின் அபாயத்தை மேலும் அதிகரிக்கும்” என்று அவர் கூறினார்.
உண்மையில், இந்த மருந்தை கவனமாக சேமித்து வைக்காவிட்டால், அது விஷம் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
“மலேசிய சுகாதார அமைச்சகத்தின் (கேகேஎம்) புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தற்செயலாக மருந்து உட்கொள்வதால் ஐந்து வயதுக்குட்பட்ட 1,000 குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் நச்சுத்தன்மையால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடத்தில் மருந்து சேமிக்கப்படாதபோது இது நிகழ்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
எனவே, யுனிவர்சிட்டி மலாயா “உங்கள் காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத மருந்துகளை எவ்வாறு பாதுகாப்பாக அகற்றுவது?” என்ற திட்டத்தை செயல்படுத்தியது. மலாயா பல்கலைக்கழக கிளினிக் தலைமையில் இந்த திட்டம் அனைத்து வளாகத்தில் வசிப்பவர்களுக்கும், உள்ளூர் சமூகத்திற்கும் மருந்துகளை மிகவும் முறையாக நிர்வகிக்க விழிப்புணர்வை வழங்குகிறது, இத்திட்டத்தின் வழி சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உபரி மருந்துகள் அல்லது காலாவதியானவைகளை யுனிவர்சிட்டி மலாயா கிளினிக்கிற்கு எடுத்துச் சென்று அங்கிருக்கும் சிறப்புத் தொட்டியில் வைக்கலாம்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட மருந்து வகைகளில் காப்ஸ்யூல்கள், திரவங்கள், கிரீம்கள், ஊசி மற்றும் சொட்டுகள் ஆகியவை அடங்கும்.
மருந்தியல் துறையின் விரிவுரையாளர் மற்றும் பாதுகாப்பு D.U.M.P இன் தலைமை ஆராய்ச்சியாளருமான டாக்டர். லீ ஹாங் கீ முறையாக அப்புறப்படுத்தப்படாத மருந்துகள் மண் மற்றும் நீர் ஆதாரங்களில் ஊடுருவி, மாசுபாட்டை ஏற்படுத்தி, நீர்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழல் அமைப்புக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று கூறினார்.
“சுற்றுச்சூழல் துறை (JAS) மலேசியாவில் உள்ள கிள்ளான் ஆறு, பென்சாலா ஆறு மற்றும் லங்காட் ஆறு போன்ற பல ஆறுகளில் ஆய்வு நடத்தியது, மேலும் நதி நீர் மாதிரிகளில் பாராசிட்டமால், இப்யூபுரூஃபன் மற்றும் டிக்ளோஃபெனாக் போன்ற மருந்துகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
“இந்த மாசுபாட்டிற்கு காரணமாக இருக்காமல் இருக்க,நோயாளிகள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தை உண்டு முடிப்பது மட்டுமன்றி மீத மருந்தின் சேமிப்பை நன்கு நிர்வகிப்பதும் மிகவும் முக்கியம்,” என்று அவர் கூறினார்.