உலகின் மிக அதிக வயதான பூனை 24 வயதில் மரணம்

உலகின் மிக அதிக வயதான பூனை 24 வயதில் மரணம்

wl2

பிரிட்டனில் உள்ள கடற்கரையோர நகரமான போர்ன்மவுத்தில் வசித்து வந்த உலகின் மிக அதிக வயதான பூனையான பாப்பி தனது 24வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானது. நெல்சன் மண்டேலா நீண்ட கால சிறைவாசத்திற்கு பின் விடுதலை செய்யப்பட்ட நாளில் தான் பாப்பியும் பிறந்தது குறிப்பிடத்தக்கது. 

கின்னஸ் சாதனை பட்டியலில் கடந்த மே 19ந் தேதியன்று பாப்பி இடம் பிடித்திருந்தது. உலகின் மிக அதிக வயதுடைய பூனை என்று கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்த சில வாரங்களிலேயே பாப்பி காலமானது அதை வளர்த்தவர்களை பலத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்த பாப்பி காலமான பின் அதன் உரிமையாளர் அவரது இல்லத்திற்கு பின்னாலேயே பாப்பியை புதைத்துள்ளார்.

பாப்பியின் பின்னங்காலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவும், நீர் தொற்று நோய் காரணமாகவும் அது காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாப்பியின் உரிமையாளரான ஜாக்குயி வெஸ்ட் கூறுகையில், “அதற்கு வயதாகி விட்டது, ஆனாலும் அது காலமானது வருத்தத்தை அளிக்கிறது. கடந்த வாரம் அதற்கு மோசமான வாரமாக அமைந்துவிட்டது. நீர் தொற்று நோயை குணப்படுத்துவதற்கான மருந்துகளை அது உட்கொண்ட போதும் சென்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அது மரணமடைந்தது. அன்று நாள் முழுவதும் பலகீனமாக காணப்பட்ட அதனுடன் தான் உடனிருந்ததாக அவர் தெரிவித்தார்”.