அரசாங்கமும், ம இ காவும் இந்தியர்களின் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ம இ கா தலைவர்கள் அவ்வப்போது பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். அப்போதுதான் ம இ கா மேற்கொண்டுவரும் பணிகள் குறித்து பொதுமக்கள் விரிவாக அறிந்து கொள்ள முடியும் என ம இ கா தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
அண்மையக் காலமாக சிலர் சமூக ஊடகங்களிலும், வலைத் தளங்களிலும அரசாங்கமும், ம இ காவும் இந்தியர்களுக்காக எதையுமே செய்யவில்லை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் நாள்தோறும் செய்திகளை வெளியிட்டு வருவதால் மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க ம இ கா தலைவர்களின் விளக்கமளிப்புக் கூட்டங்கள் அவசியமாகிறது என டத்தோஸ்ரீ மேலும் கூறினார்.
ஜோகூர், யோங் பேங்கில் ஜோகூர் மாநில ம இ காவின் 71வது பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தப் போது, டாக்டர் சுப்ரா இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
1969 ஆம் ஆண்டு, நாட்டில் இனங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக பதற்ற நிலை உருவானபோது பல்லின மக்களை ஒன்றுபடுத்த அரசாங்கம் 1970 ஆம் ஆண்டு ருக்குன்நெகாரா எனும் தேசியக் கோட்பாட்டை ஒரு கொள்கையாக அறிவித்தது. அது ஓர் அற்புதமான கொள்கை. அக்கொள்கை இன்று முழுமையாக அமல்படுத்தப்-படுமானால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களுக்கு மிக எளிதாக தீர்வுக் காண முடியும். அதனைக் கருத்தில் கொண்டே அரசாங்கம் இவ்வாண்டுக்கான தேசியத் தினக் கொண்டாட்டக் கருப்பொருளாக “என் நாடு: ஒரே உள்ளம், ஒரே உணர்வு” என அறிவித்துள்ளது. இக்கொள்கைக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் எதிர்வரும் தேசிய ம இ கா மாநாட்டில் இக்கருத்து மீண்டும் வலியுறுத்தப்படும் என டத்தோ சுப்பிரமணியம் தெளிவுப்படுத்தினார்.
பொதுத் தேர்தல் பற்றி பேசிய அமைச்சர், ஜோகூர் மாநிலத்தில் ம இ கா வேட்பாளர்கள் கடந்த காலங்களைப் போலவே இம்முறையும் தங்களது பாரம்பரிய தொகுதிகளில் போட்டியிடுவர். மலாய்க்காரர்கள் மத்தியில் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளதால் ம இ கா வேட்பாளர்கள் இந்தியர்களின் ஆதரவை அதிகரிப்பது அவசியம் என டத்தோஸ்ரீ குறிப்பிட்டார்.
ஜோகூர் மாநில அரசாங்கமும், மாநில ம இ காவும் இந்தியர்களின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, மாநிலத்தில் இருந்து உயர்க்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு மாநில ம இ கா வழங்கிவரும் ஆதரவை தாம் பெரிதும் வரவேற்பதாக டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் தமதுரையில் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
எதிர்க்கட்சிகளால் குறையை மட்டுமே காண முடியும். குறையை மட்டுமே எழுத முடியும். ஆனால், சமூகத்துக்காக எதையுமே செய்ய இயலாது. எனவே, உங்களது ஆதரவு இருக்கும் வரை சமூகத்துக்காகப் பாடுபடும் ம இ காவை யாராலும் அழிக்க முடியாது என டத்தோஸ்ரீ மேலும் குறிப்பிட்டார்.
இன்றைய பேராளர் மாநாட்டில் ம இ காவின் மத்திய செயலவை உறுப்பினர்களோடு, கிளைத் தலைவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.