71 வது பகாங் மாநில ம.இ.கா தொடர்புக் குழு மாநாடு 28/08/2017 அன்று நடைபெற்றது. மாநாட்டில் ம.இ.கா தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொண்டார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ம இ கா பகாங் மாநிலத்தில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியிலும், சாபாய் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடும். அதற்கு பிரதமரும், மாநில முதல்வரும் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளனர் என டாக்டர் ச. சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
எனவே, அந்த இரு தொகுதிகளிலும் இம்முறை ம இ கா வேட்பாளர்கள் கண்டிப்பாக வெற்றிப் பெறுவது அவசியம். ம இ கா வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றால் அது கட்சிக்கும், இந்திய சமூகத்துக்கும் அரசியல் ரீதியாக பலத்தை அதிகரிக்கும். அதே வேளையில் அவ்விரு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினால் அது ம இ காவை பலம் இழக்கச் செய்துவிடும். இறுதியில் இந்திய சமூகம் பெரும் இழப்பை எதிர்நோக்க நேரிடும் என டத்தோஸ்ரீ தெளிவுப்படுத்தினார்.
பகாங், தெமர்லோவிலுள்ள துன் அப்துல் ரசாக் மண்டபத்தில் பகாங் மாநில ம இ காவின் 71வது பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ம இ கா, இன்று நேற்று தொடங்கப்பட்ட ஒரு கட்சியல்ல. 70 ஆண்டுகளுக்கு முன்னர் பலரது போராட்டத்தின் வழி உருவான ஒரு கட்சி. பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இந்தியர்களின் நலனைப் பேண அமைக்கப்பட்ட ஒரு கட்சி. நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த கட்சி இன்னும் பல ஆண்டுகள் மக்களுக்கு நிறைவான சேவை வழங்க இத்தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் வெற்றிப் பெறுவது மிக மிக அவசியம் என டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.
ம இ கா போட்டியிடும் தொகுதிகளில் தனி நபர்கள் போட்டியிட்டு வெற்றிப் பெற்றால் அதனால் சமுதாயம் எவ்வித பலனையும் அடைய வாய்ப்பில்லை. அதே வேளையில் ம இ கா வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றிருந்தால் அவர்கள் மாநில ஆட்சிக் குழுவில் இடம் பெற்று மாநில மக்களுக்கு நிறைவான சேவையை வழங்க முடியும் என டத்தோஸ்ரீ நினைவுப்படுத்தினார்.
இன்றைய பேராளர் மாநாட்டில் ம இ காவின் மத்திய செயலவை உறுப்பினர்களோடு, கிளைத் தலைவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.