முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த பிப்ரவரி 18-ந் தேதி இவர்களின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.
இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
ஆனால் தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்வதற்கு இடைக்கால தடை விதித்து பிப்ரவரி 20-ந் தேதி உத்தரவிட்டது.
பின்னர் கடந்த ஏப்ரல் 25-ந் தேதி அன்றைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கியது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் போது, “இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் உரிய அரசாங்கம் என்பது குறித்து இருதரப்பு வாதங்களிலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஒரே வழக்கில் இரண்டு உரிய அரசாங்கங்கள் இருக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்தது. மேலும் ‘ஆலோசனை’ என்பதை ‘ஒப்புதல்’ என்ற பொருளில் எடுத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது” என்று கூறினர்.
எனவே, இந்த வழக்கில் இறுதி முடிவை எடுப்பதற்கு முன் இந்த 2 கேள்விகள் உள்ளிட்ட மொத்தம் 7 அம்சங்கள் மீது விளக்கம் தேவைப்படுவதாக கூறிய நீதிபதிகள், இதற்கான விடையை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் என்று கூறி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் சாந்தன், முருகன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர், ஜே.செல்லமேஸ்வர், ஏ.கே.சிக்ரி, ரோன்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று தொடங்கியது.
விசாரணையின் தொடக்கத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதாடினார். அப்போது கூறியதாவது:-
கடந்த ஏப்ரல் 25-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வழங்கிய போது இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அரசியல் சாசன அமர்வு மொத்தம் 7 அம்சங்கள் மீதான கேள்விகளுக்கு விடையை முடிவு செய்யும் வகையில் விசாரணையை மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டது. முக்கியமான இந்த அம்சங்கள் மீது முடிவு எடுக்க நீண்ட நாள் ஆகும்.
குறிப்பாக மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரம் தொடர்பான கேள்வி மிகவும் முக்கியமானது. மேலும் மரண
தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும் போது, சம்பந்தப்பட்ட நபர் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டுமா? அல்லது சிறையில் 14 ஆண்டுகள் கழித்த பிறகு அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி உரிமை கோர முடியுமா? என்பது பற்றியும் முடிவு எடுக்க வேண்டும்.
எட்டாவதாக இந்த அமர்வு மற்றொரு அம்சத்தையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, மாநில அரசு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது அல்லது அவர்களை விடுவிப்பது குறித்த முடிவை எடுக்கும்போது, சம்பந்தப்பட்ட நபர் செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கருத்தையும் கேட்க வேண்டுமா? என்ற அம்சம் குறித்தும் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசின் வக்கீல் ரஞ்சித் குமார் கூறினார்.
Previous Post: தைவானில் ட்ரான்ஸ் ஏசியா ஏர்வேய்ஸ் விமானம் விபத்து