செவ்வாய்க்கிழமை (11 ஜூலை 2017) கல்வியமைச்சின் ஏற்பாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையில் மலேசியாவில் 200 ஆண்டு தமிழ் கல்வியைக் குறிக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள, டெங்கில் தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 200 ஆண்டுத் தமிழ்க் கல்வியை முன்னிட்டுப் பளிங்கு வெட்டுப் பதிப்பு நிர்மாணிக்கப்பட்டதோடு, தமிழ்க்கல்வி வரலாற்று நூல் வெளியீடும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரதம மந்திரியுடன் மலேசிய சுகாதார அமைச்சரும் மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு, கல்வியமைச்சர் டத்தோ மாட்சீர் காலிட், கல்வி துணையமைச்சர் டத்தோ P. கமலநாதன், நகர்புற நல்வாழ்வுத் துறை அமைச்சர் டத்தோ நோ ஓமார் மற்றும் ம.இ.காவின் தலைவர்கள் பொது மக்கள் ஆகியோரும் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் இரசாக் அவர்களின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஏறக்குறைய 8.9 கோடி ரிங்கிட் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டுக்கு வெளியே, இம்மலேசிய மண்ணில்தான் தமிழ்க்கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அதற்காக பிரத்தியேக தமிழ்ப்பள்ளிகளும் அமைக்கப்பட்டு இயங்கும் சூழ்நிலை இருக்கிறது என்றும் டாக்டர் சுப்ரா தனது உரையில் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக மலேசியாவில் தமிழ்மொழி உயர்வுக்கும், நிலைத்து நிற்பதற்கும் வித்திடப்பட்டுள்ளது.
பிரதமர் பேசுகையில் இந்தியர்களுக்காக வகுக்கப்பட்டுள்ள வரைவு திட்டம் நிஜமான பலன்களை மலேசிய இந்தியர்களுக்கு அளிக்கும் என கூறினார். இந்திய வம்சாவழியில் வந்த மலேசிய பிரதமரைவிட தமது அரசு மலேசிய இந்தியர்களின் நலனுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படித்து உள்ளது எனவும் தனது உரையில் பிரதமர் கூறினார். மேலும் ஒரு சமுதாயம் உண்மையான முன்னேற்றம் அடைய கல்வி மிக முக்கியம் எனவும் இந்திய சமுதாயம் கல்வி கற்க தமக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி தான் மட்டுமல்லாமல், தனது குடும்பம் மற்றும் தனது சமூகத்தையும் முன்னேற செய்ய வேண்டும் எனவும் அப்போது பிரதமர் கூறினார்.